பக்கம் எண் :

பக்கம் எண் :324

Manimegalai-Book Content
22. சிறைசெய் காதை

காவல்செய்க என்றனன் அணிகிளர் நெடுமுடி அரசன் வேந்து என்-கணிகையின் மகளாகிய மணிமேகலையையும் சிறை செய்க என்றுரைத்தனன் அழகு விளங்குகின்ற பெரிய முடியினையுடைய அரசாளும் மன்னன் என்க.

சோழிக எனாதி என்பதற்குச் சோழனுடைய ஏனாதிப் பட்டம் பெற்ற சேனைத்தலைவன் என்பது பொருளாகும். ஏனாதி - தானைத் தலைவர்க்கு அரசர் அளிக்கும் பட்டப்பெயர் என்பதும், அதனுடன் மோதிரம் ஒன்றும் அளிக்கப்படும் என்பதும் தொல்காப்பியத்தில் 1"மாராயம் பெற்ற நெடுமொழியானும்" என்பதற்கும், சீவகசிந்தாமணியில் 2"ஆழி தொட்டான்" என்பதற்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் அறியப்படும். ஒரே வழி அமைச்சராயினார் தானைத் தலைமை பூண்டு படையை நடத்துவரேல் அச்சார்பு பற்றி அவர்க்கும் இப்பட்டப்பெயர் பொருந்துமென்க. விஞ்சையன், மைந்தன், மணிமேகலை என்னும் மூவரிடத்தும் குற்றமில்லையாக மாதவன் தீவினை மேல் ஏற்றி உரைத்திருப்பினும் அரசனுக்கு ஒவ்வோரியல்பு பற்றி அம் மூவர் பாலுமே வெறுப்புளதாயிற்றென்பது "தகவிலன் விஞ்சையன்," "துயர்வினை யாளன் றோன்றினன்", "கணிகை மகளையும் காவல் செய்க," என்னும் அவன் கூற்றால் அறியப்படும். விஞ்சையன் செய்கையால் தான் முறைசெய்தற்கு இடனில்லாமற் போனமையின் "தகவிலன் விஞ்சையன்" என்றானென்க.

காவலின்றெனின், நோன்புமின்று கற்புனின்று எனத் தனித்தனி முடிக்க. மனு வேந்தன் மகனை முறை செய்த வரலாறு பெரியபுரா ணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பால் அறியப்படும். இதனை 3"மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான், முறைமைக்கு மூப்பிளமை யில்" 4;"வாயிற் கடைமணி நடுநா நடுங்க; ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன், அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன், பெரும்பெயர்ப் புகாரென் பதியே" 5"சிந்தனை யாவிற்குமுற்றத் திருத்தேரின், மைந்தனை யூர்த்த மனுவோனும்" என்பவற்றானு மறிக: துயர்வினை துயருக்கு ஏதுவாகிய வினை; தீவினை.

மண்டிலம் சீப்புப் புரிந்தோர் உரைப்பக் கேட்டு, மாதவரெல்லாம் மணிமேகலையை நோக்கி, ''இதனை நீ அறிவதுமுண்டோ'' என, அவள் உரைத்தலும், அவளைச் சிறுவனோடு வேறிடத் தொளித்து இசைத்துச் சென்று குறுகி ஒரு மாதவனுரைத்தலும், கேட்டு வேந்தன், ''உரையும்'' என ஒரு மாதவன் உரைக்கும்; அங்ஙனம் உரைக்கும் மாதவன் ஏத்தி உரைத்தலும் வேந்து காவல் செய்கென்றனன் என, வினைமுடிவு செய்க.

சிறைசெய் காதை முற்றிற்று.


1 தொல். புறத். 8.  2 சீவக. 2167.  3 பழ. 242.  4 சிலப். 20: 53-9.  5 விக்கிரம சோழனுலா. 4