பக்கம் எண் :

பக்கம் எண் :331

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை

துடைக்கும் பயங்கெழு மொழியினள் - அவர்கட்கு உண்டாகிய துன்பங்களை நீக்கும் பயன் சிறந்த மொழியினையுடையாள் ஆதலின், இலங்கு அரிநெடுங்கண் இராசமாதேவி-விளங்குகின்ற அரிபடர்ந்த பெரிய கண்களையுடைய அரசன் பெருந்தேவி, கலங்கு அஞர் ஒழியக் கடிது சென்று எய்தி-கலங்குதற்குக் காரணமாகிய துன்பம் நீங்குமாறு விரைவிற் சென்று அவளிருப்பிடத்தையடைந்து, அழுது அடி வீழாது ஆயிழை தன்னைத் தொழுது முன்னின்று தோன்ற வாழ்த்தி-அவள் அடிகளில் வீழ்ந்து அழாமல் மன்னவன் றேவியை அஞ்சலி செய்து முன்னே நின்று நன்கு வாழ்த்தி ;

மன்னவனருளாற் கடிது சென் றெய்தி என்க. மொழியினள் ஆகலின் என விரித்துரைக்க ; மொழியினளாகிய மூதாட்டி என்றியைத்தலுமாம். நிலக்கிழமை-அரசாளு முரிமை. ஆயினும் என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருளில் வந்தது ; விகற்பப் பொருட்டுமாம். ஆயிழை : சுட்டு.

11--6. கொற்றம் கொண்டு குடி புறம் காத்தும்-வெற்றிகொண்டு குடிகளைப் பிறர் நலியாமற் பாதுகாத்தும். செற்றத்தெவ்வர் தேஎம் தமதாக்கியும் - பகைமையை யுடைய மாற்றாது நாட்டினைத் தம்முடையதாக்கியும் அன்றி, தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச்செல்க என-தருப்பைப் புல்லிற் கிடத்தி வாளாற் பிளந்து போரில் வெற்றிகொண்டு உயிர் துறந்த மன்னர் செல்லும் உலகத்தின்கட் செல்க என்று கூறுமாறு, மூத்து விளிதல்-வாளா முதுமையுற்று இறத்தல், இக்குடிப் பிறந்தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தகவுடைத்தே - இச்சோழர் குடியிற் பிறந்தோர்க்கு நாணுந் தகுதியை யுடைத்து ஆகலான் இதனைக் கூறுதற்கு எனது நா எழுகின்றிலது ;

கொற்றம் - அரச வுரிமையுமாம். செற்ற தெவ்வர் என்பது பாடமாயின் வெகுண்டெழுந்த பகைவர் என்க. தமதாக்கியும் அன்றி என ஒரு சொல் வருவித்துரைக்க ; தமதாக்கியும் மூத்து விளிதல் என்றியைத் துரைப்பாரு முளர். மூத்து விளிதலோடு பிணியால் விளிதலுங் கொள்க. போரிலுயிர் துறவாது நோயால் விளிந்த அரசரது யாக்கையை அந்தணர் தருப்பையிற் கிடத்தி வாளாற் பிளந்து அடக்குவரென்பது, 1"ஓடன் மரீஇய பீடின் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார், அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்; திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி, மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த, நீள்கழல் மறவர் செல்வுழிச்செல்கென, வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர்" என்பதனால் அறியப்படும்: 2"மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவர்..." என்னும் நச்சினார்கினியர் உரையும் ஈண்டு அறியற்பாற்று.


1 புறம். 93.   2 தொல். அகத். 44. உரை.