பக்கம் எண் :

பக்கம் எண் :334

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை

பொருந்தும் குறியினைச் செய்து கூடினள் என்னும், பான்மைச் கட்டுரை பலர்க்கு உரை என்றே-முறைமையுடைய கட்டுரையைப் பலர்க்கும் கூறுவாயாக என்று, காணம் பலவும் கைநிறை கொடுப்ப - பொற்காசுகள் பலவற்றைக் கைநிறையக் கொடுக்க ;

அரசன் றேவி கூஉய் உரை யென்று கொடுப்ப வென்க. வல்லாங்கு-வல்லமை ; 1"வல்லாங்கு வாழ்து மென்னாது" என்பது காண்க. நிறைய என்பது நிறை என விகாரமாயிற்று.

49--57. ஆங்கவன் சென்று அவ்வாயிழை இருந்த பாங்கில் ஒரு சிறைப் பாடு சென்று அணைதலும்-அறிவற்ற அவ்விளைஞன் மணிமேகலை இருந்த அழகிலாத ஒரு புறத்திலே பக்கலிற் சென்று அடைதலும், தேவி வஞ்சம் இது எனத் தெளிந்து - அரசன் மனைவியினுடைய வஞ்சமாகும் இது என்று உணர்ந்து, நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி - நாப் புடை பெயருமளவில் கூறும் மந்திரத்தைச் செவ்வனம் ஓதி, ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்ப '' மணிமேகலை ஆடவன் வடிவத்துட னிருக்க, காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி - பொன் பெற்ற கயவன் மிகுந்த துன்பத்தை யடைந்து, அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் - அரசன் மனைவியரிருக்கும் அந்தப்புரத்தில் ஆண் மக்கள் குறுகார், நிரயக் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று-நிரயத்தை யடைதற்குரிய கொடுமையை உடைய இவளது தீய எண்ணத்தை யான் அறிந்திலேன் என்று கருதி, அகநகர் கைவிட்டு ஆங்கவன் போய பின் - அவன் ஊரைவிட்டு ஓடிய பின்னர்;

மந்திரம் - வேற்றுரு எய்துவிக்கும் மந்திரம் மந்திரம் பிறர் செவிக்குப் புலனாகாவாறு நாப்புடைபெயரும் அளவானே ஓதல் பெறல் வேண்டுமென்பது 2"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி, நாவியன் மருங்கின் நவிலப் பாடி" என்பதனாலும் அறியப்படும். ஆயிழை தெளிந்து ஓதி இருப்ப வென்க. உரிமைஇல்-உரிமை மகளிர் இருக்கும் இல்லம்; இஃது அந்தப்புரம் எனப்படும்; அதன்கண் ஆடவர் எய்தப் பெறார் என்பதனை 3"ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்" என்பதனா னறிக ; மகளிராலேயே காக்கப்படுதலின் இதனைக் 4"குழை முகப் புரிசை" என்பர் திருத்தக்க தேவர்.

58--66. மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று - உதயகுமரனுக்குக் காம நோயை உண்டாக்கி அவனைக் கொல்லுவித்த இவளை உயிருடன் வைத்திருப்பதால் யாது பயன் என்று கருதி, உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என்று பொய் நோய்காட்டிப் புழுக்கறை அடைப்ப - உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய நோயினால் மணிமேகலை உணவுண்டல் நீங்கினாள் என்று அவள்பால் பொய் நோயைக் கூறி அவளைப் புழுக்கமுடைய ஓர்


1 புறம். 163.    2 முருகு. 186-7.    3 நெடுநல். 107.    4 சீவக. 275.