பக்கம் எண் :

பக்கம் எண் :337

Manimegalai-Book Content
23, சிறைவிடு காதை
 

ஆண் வடிவங்கொண்டு இருந்தேன், ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது-பசி நீக்கும் மந்திரம் பெற்றிருந்தமையாலன்றோ நீ செய்த வஞ்சத்தினின்றும் தப்பியது ;

மறுபிறப் புணர்ந்தேன் ஆகலின் என விரித்துரைக்க. வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரம் உடைமையினால் ஆணுரு நான் கொண்டிருந்தேன் எனவும் ஏது விரித்துரைக்க. மாணிழை: முன்னிலையிற் படர்க்கை. வஞ்சம் - உய்யா நோயின் ஊணொழிந்தனள் எனப் புழுக்கறை யடைத்தது.

98--101.   அந்தரஞ் சேறலும் அயலுருங்கோடலும் - விசும்பூடு செல்லுதலையும் வேற்றுருக் கொள்ளுதலையும், சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்-முற்பிறப்பில் கணவனாயிருந்தோனைப் பெற்ற நினது கொடிய துன்பத்தை நீக்கித் தீவினைகளை ஒழிக்கும் பொருட்டு உளத்தி லெண்ண வில்லை ;

வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலேன் என்க.

102--3.   தையால்-தையலே, உன்றன்-உனது, தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து-தடுமாற்றத்துக்குக் காரணமாகிய வருத்தத்தைச் செய்யும் அறியாமையாகிய மயக்கத்தின் நீங்கி, இன்னுரை கேளாய் - யான் கூறும் இவ்வினிய மொழிகளைக் கேட்பாயாக ; எய்யாமை - அறியாமை. மையல் - செல்வச் செருக்குமாம்.

104--11. ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் காருக மடந்தை- அரசரது கொடுங்கோன்மையால் அனைவரும் தத்தம் நிலைகலங்கிய நல்ல நாட்டில் இல்லற ஒழுக்கினளாகிய ஒருத்தி, கணவனும் கைவிட-கணவனும் கைவிட்டமையான், ஈன்ற குழவியொடு தான் வேறாகி - தான் ஈன்ற குழந்தையினின்றும் தான் வேறிடத்துப் பிரிவுற்று, மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி - மயங்கி ஒரு திக்கிற் சென்று வரைவின்றி வாழுமிடத்து, புதல்வன் தன்னை ஓர் புரிநூன் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க - அக்குழவியை ஓரந்தணன் ஊரிலுள்ளோர் அறியாதவாறு வளர்த்து வர, ஆங்கப் புதல்வன் அவள் திறம் அறியான் தான் புணர்ந்து அறிந்து பின் தன்னுயிர் நீத்தலும் - அப்புதல்வன் அவள் தன் தாய் என்னுந் தன்மையை அறியானாய் அவளுடன் கூடிப் பின்னர் உணர்ந்து தனது உயிரைத் துறந்ததனையும் ;

1"ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல்" என்பது ஈண்டு அறியற்பாலது. "மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவலின்றெனில் இன்றால்" (22: 208--9) என முன்னரும் இக் கருத்து


1 கலி. 5.