னிறந்த துன்பம் நெருப்பாக மனமே விறகாக உள்ளத்தைச் சுடுகின்ற கொடிய தீயை
மணிமேகலை அவிக்க;
செற்றஞ் செறுத்தல் முதலியன இல்வழிக் கற்றகல்வி
பயனுடைத்தன்று என்றுமாம்; மேலுரைத்த துன்பந்தரும் காம முதலியவற்றைத் துறவாவழி,
கல்வி பயனுடைத் தன்று என்றுரைத்தலுமாம். கல்வி காரிகையன்று எனக் கூட்டி, கல்வி
அழகுடைத்தன்று என்றுரைப்பாரு முளர். செல்லுல கறிதலாவது மறுமையுலகம் உண்டென்பதையும்
ஆண்டு இன்புறுதற்கு இவண் செய்யற்பாலது இது வென்பதனையும் அறிதல். துணிபொருள்-தத்துவ
ஞானம். தெளிந்து - தெளிவித்து என்றுமாம்.
142--7. தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து - தேற்றாங்கொட்டையால்
தேற்றப் பெற்ற சிலவாகிய நீரைப் போல மனந் தெளிந்து, மாறுகொண்டு ஓரா மனத்தினள்
ஆகி - பகைமை கொண்டு சிந்தியாத மனத்தினையுடையளாகி, ஆங்கவள் தொழுதலும்
- மாதேவி வணங்குதலும், ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி-மணிமேகலை அதனைப்
பொறாமல் தான் வணங்கித் துதித்து, தகுதி செய்திலை காதலற் பயந்தோய் அன்றியும்
காவலன் மாபெருந் தேவி என்று - என் நாயகனைப் பெற்ற தாய் அன்றியும் அரசனுடைய
பட்டத்துத் தேவியாக உள்ளாய் ஆகலின் நீ தக்க தொன்றினைச் செய்திலை என்று
கூறி, எதிர் வணங்கினள் என் - மணிமேகலை எதிர் தொழுதனள் என்க.
தேறு - தேற்றாம் வித்து, கலக்கமுற்ற சிறிய
நீரானது தேற்றாம் வித்தினால் தெளிவடைதல் போல இராசமா தேவியின் கலங்கிய
உள்ளம் மணிமேகலையின் அறிவுரையால் தெளிந்த தென்க. முற் பிறப்பில் எனக்குக்
கணவனாயிருந்தோனை இப்பிறப்பிற் பெற்றாய் என்க. தகுதி செய்திலை - நீ வணங்கியது
தகுதியன்று என்றபடி.
வாசந்தவை யென்னும் மூதாட்டி மன்னவனருளாற்சென்றெய்தித்
தொழுது முன்னின்று வாழ்த்தி, "மன்னவன்றன்முன் துன்பங்கொள்ளேல்" என்று போயபின்
அஞ்சலோதி கரந்து அடக்கிக்கொண்டு மறைத்து, ஒரு நாள் அரசன்பால் ''ஆயிழை
தனக்கு சிறைதக்கன்று'' என, ''சிறை நோய் தீர்க்க'' என்று இறை சொல, குழலாள்
அவளைக் கூஉய்க் கோயிலுட்புக்கு மயற்பகை யூட்ட, அறிவினளாக, கொடுப்ப அணைதலும்,
ஆயிழையிருப்ப, போயபின் அடைப்ப, இருப்ப, அவள் தொழ, மணிமேகலை ஒழிவின்றுரைத்து
மற்றும் உரை செய்யும்; அங்ஙனம் உரை செய்பவள் அகஞ் சுடு வெந்தீ அவிப்ப,
அவள் தொழுதலும், ஆயிழை பொறாஅளாய் ''மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினளென,
வினை முடிவு செய்க.
சிறைவிடு
காதை முற்றிற்று.
|