பக்கம் எண் :

பக்கம் எண் :342

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை

உனது பரத்தைமைத் தொழிலைப் புலைமை யென் றெண்ணி வந்த இவள் உன்னுடன் போந்து உன் மனையிற் புகுதாள்; என்னுடனேயே இருத்தற்குரியள், ''என்று சொல்லிக்கொண்டிருக்கையில், மணிமேகலையின் நிலைமையைக் கேட்ட மாதவி அதனைச் சுதமதிக்குக் கூறி வருந்திச்சென்று அறவணவடிகளை வணங்கி அறிவித்து அவருடன் அவளைச் சிறை மீட்டற் பொருட்டு இராசமாதேவியிடம் வர, இராசமாதேவி அவரைக் கண்டவுடன் ஏனை இருவரோடும் எழுந்து எதிர் சென்று அவ ரடியை வணங்கினாள்; அவர், ''அறிவுண்டாக'' என்று ஆசி கூறினர்; அப்பால் அவள் அருந்தவர்க் கமைந்த தவிசொன்றில் அவரையிருத்தி அடிவிளக்கிச் சிறப்புச் செய்து, ''எமது நல்வினையே மிகப் பெரியோராகிய நும்மை இங்கு எழுந்தருளச் செய்தது; நாத்தொலை வில்லா யாயினுந் தளர்ந்து, மூத்தவிவ் யாக்கை வாழ்க பல்லாண்டு,'' என்று கூற, அவர், ''யான் இவ்வுடம்பிற் பொருந்தி யிருந்தும் குடக்கில் மறையும் கதிரவனைப் போன்றேன்; பிறந்தார் மூத்தார் பிணிநோயுற்றார் இறந்தா ரென்கை யியல்பே;'' என்று உரைத்து, பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களையும் அவருக்கு அறிவுறுத்தி, ''எப்பொழுதும் நல்லறத்தையே பேணிக் கேட்டு அவ்வா றொழுகுமின்,'' என மாதவிக்கும் சுதமதிக்கும் கூறி, மணிமேகலையை நோக்கி, நீ பிற அறங்களை யெல்லாம் கேட்ட பின்பு, இவற்றையும் இவற்றின் பகுதிகளையும் உனக்கு விளங்க உணர்த்துவேன்'' என்று கூறித் தம்மிடஞ் செல்லுதற்கு எழுதலும், மணிமேகலை எழுந்து அவரை வணங்கி, பின்பு இராசமாதேவி முதலியோரை நோக்கி, '' மாதவர் நன் மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந் நகரிலிருப்பேனாயின், உதயகுமரனுக்கு இவள் கூற்றா யிருந்தன ளென்று யாவருங் கூறுவர்; ஆதலால் இங்கிரேன்; இனி ஆபுத்திரனா டடைந்து பின்பு மணிபல்லவஞ் சார்ந்து புத்தபீடிகையைத் தரிசித்துவிட்டு, அப்பால் வஞ்சிநகரஞ் சென்று பத்தினிக் கடவுளைத் தரிசித்தபின் யாங்கணுஞ்சென்று நல்லறஞ் செய்துகொண்டிருப்பேன்; எனக்கு இடருளதாகுமோ என்று நீர் இரங்கன்மின்,'' என்று கூறி அவர்களையும் வணங்கி ஆதவன் மறைந்த அந்திமாலைப் பொழுதிலே சென்று உலகவறவியையும் சம்பாபதியையும் கந்திற்பாவயையும் வலங்கொண்டு துதித்து, விசும்பின் வழியே பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புறத்துள்ள ஓர் பூம்பொழிலில் இறங்கி, ஆங்குள்ள ஒரு முனிவனை வணங்கி, ''இந்நகரின் பெயர் யாது? இதனை யாளும் அரசன் யார்? என்று கேட்டாள்; அம்முனிவன், ;இதன் பெயர் நாகாபுரம் என்பது; இதனை யாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணியராசன் என்பான்; இவன் பிறந்தநாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தலறியாது; மண்ணும் மரங்களும் பிறவும் பல வளங்களையும் மிகத் தாராநிற்கும்; உயிர்கட்கு ஒருவகையான நோயுமில்லை,'' என்று அரசன் பெருமையை அவளுக்குக் கூறினான்.]