பக்கம் எண் :

பக்கம் எண் :349

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை

அரசமாதேவியே! கணிகையர் யாரினும் யான் அடைந்தது போலும் துன்பத்தை வேறு யாரும் அடைந்திலர் ;

ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப்பூம்பட்டினத்திலே பிறந்து சிறப்பெய்திய நாடகக்கணிகைய ராவரென்க. கண்ணகி வஞ்சின மாலையில், புகார்நகரிலே பிறந்த கற்புடை மகளிர் எழுவருடைய வரலாற்றை எடுத்தியம்பி, 1 ''மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்'' என்று கூறியது போலச் சித்திராபதி ஆண்டுப் பிறந்த நாடகக் கணிகையரை எடுத்துக் காட்டுவாளாயின ளென்க. உர வோன் - இந்திரன். அருந்தவன் - அகத்தியன். முனிந்த - வெகுண்டு சபிக்கப்பட்ட வென்க. இந்திரன் முன் சாபமேற்ற உருப்பசியானவள் புகாரிலே மாதவி யென்னும் பெயருடன் தோன்றி யிருந்தன ளென்பது சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையாலும் கடலாடு காதையாலும் அறியப்படுவது. மாபெருந்தேவி: விளி.

19--26. பூவிலே ஈத்தவன் பொன்றினன் என்று - அற்றைப் பரிசமளித்த கோவலன் இறந்தனன் என்று, மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி அறவணவடிகள் உறையுளிற் புக்கதும், பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக்கூத்தி சென்று ஐயங் கொண்டதும் - மணிமேகலை பாத்திரத்தை ஏந்திப் பரவித் தோன்றும் இல்லங்கள்தோறும் சென்று பிச்சை ஏற்றதும், நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் - பரிகசித்தற்குக் காரணமாவனவேயன்றி நாடக மகளிரின் இயல்பன்மையால் அவர்க்குத் தகுதி என்று கூறார், மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் - உதயகுமரனுக்கு நேர்ந்த இடுக்கணே யன்றியும் மணிமே கலையால் இம்முதுநக ரடையும் துன்பமும் உண்டு ;

பூவிலை - பூவிற்கு விலை ; அற்றைப் பரிசம் என்பர் : 2 "பூவிலை மடந்தையர்" என்பதன் உரை காண்க. மாதவர் பள்ளியுளடைந்தது என்றதனால் துறவு பூண்டமை பெற்றாம். அரங்கக்கூத்தி - மணிமேகலை; அரங்கிலே கூத்தியற்றுதற்குரியவள் என்றபடி.

27--32.உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டு - உப்பளத்தின் மருங்குள்ள உயரிய நெடிய மணற்கரையினை உடைய, பொங்கு திரை உலாவும் புன்னையங் கானல்-மிகுதியான அலைகள் உலாவுகின்ற புன்னைமரச் சோலையின்கண், கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப - ஒளிப்பொருந்திய மணிகளானாய பெரியமுடியினையுடையகிள்ளி இளவேனிற்பருவத்தில் தங்குதலால் அவன் முன்னாக, இறும்பூது சான்ற பூநாறு சோலை யாருமில் ஒரு சிறை - வியக்குந் தன்மை யமைந்த மலர்மணம் வீசும்


1 சிலப். 21 : 35. 2 சிலப். 5 : 51.