பக்கம் எண் :

பக்கம் எண் :350

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

பொழிலில் யாருமில்லாத ஒரு பக்கலில், தானே தமியள் ஒருத்தி தோன்ற-தானே தனித்துப் போந்த மெல்லியல் ஒருத்தி தோன்ற;

உம்பளம் - உப்பளம் : மெலித்தல் பெற்றது. நெடுமுடிக்கிள்ளி - ஓர் சோழமன்னன்; உதயகுமரன் றந்தை. கிளர்மணி என்பது முடிக்கு அடையாய் வந்தது. முன்னா - முன்னாக; எதிரே. இறும்பூது சான்ற ஒருத்தி யெனக் கூட்டுதலுமாம். நெடுமுடிக்கிள்ளி இளவேனிலில் புன்னையங் கானலிலே இறுப்ப, இவன் முன்னாக ஒருத்தி தோன்ற வென்க

23--43.   இன்னள் ஆர் கொல் ஈங்கிவள் என்று - இவ்வுழி இருப்பவளாய இத்தன்மையை யுடையாள் யாவளோ என்று, மன்னவன் அறியான் மயக்கம் எய்தா-அரசன் அறியானாய் மயக்க மடைந்து, கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் - கண்ட கண்களினும் கேட்ட காதுகளினும், உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் - அருந்திய நாவினும் மோந்த மூக்கினும், உற்றுணர் உடம்பினும் - தீண்டி யுணர்ந்த உடம்பினும், வெற்றிச் சிலைக் காமன் - வென்றி வில்லினையுடைய காமவேளின், மயிலையும் செயலையும் மாவும் குவளையும் - மல்லிகையும் அசோகும் மாவும் குவளையும், பயிலிதழ்க் கமலமும் - செறிந்த இதழ்களையுடைய தாமரையுமாகிய, பருவத்து அலர்ந்த - பருவத்தின்கண் மலரப் பெற்ற, மலர் வாய் அம்பின் வாசம் கமழ - மலர்களாகிய அம்பின் மணங் கமழ்தலால , பலர் புறம் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப - பல மன்னரை வென்று புறங்கண்ட அரசன் பணிந்து அவள் ஏவுந் தொழிலைக் கேட்ப, ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் - ஒரு திங்களளவு அவனுடன் கழித்தாளாயினும் ஒன்றுங் கூறாதே, பொருவரு பூங்கொடி போயின அந்நாள் - ஒப்பற்ற பூங்கொடி போல்வாள் சென்றுவிட்ட அந்தநாளில் ;

அவளுடைய உருவைக் கண்டும் மொழியைக் கேட்டும் இதழ் முதலியவற்றை உண்டும் உயிர்த்தும் உற்றும் உணர்ந்த அரசனுடைய கண் முதலிய ஐம்பொறிகளிலும் காமனுடைய மலரம்புகள் ஐந்தும் தைத்தன் வென்க. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருள்களால் நுகரப்படுவன ஒரே காலத்தில் அவள் கண்ணே நுகரப்பட்டன என்றார் ; 1 "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண் டொடி கண்ணே யுள" என்பது ஈண்டு நினைத்தற்குரியது. மயிலை முதலியன காமன் அம்புகள் ; மலர்களாதலின் வாசங் கமழ என்றார். போரிலே பலரைப் புறங்கண்ட வீரனாயினும் ஓர் மெல்லியற்கு எளிய னாயினான் என்பார், ‘பலர் புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப’ என்றார். உரையாள்-தன் வரலாற்றினை உரைத்திலளாய். போயினள் என முடித்து, அங்ஙனம் போயின அந்நாளில் என்றுரைக்க.


1 குறள், 1101.