44--5. யாங்கு
ஒளித்தனள் அவ்விளங்கொடி என்றே - அவ்விளங் கொடி போல்வாள் யாண்டுச்
சென்று மறைந்தனள் என, வேந்தரை அட்டோன் மெல்லியல் தேர்வுழி - பகை மன்னரை
வென்ற வேந்தன் அவளைத் தேடும்பொழுது, நிலத்திற் குளித்து நெடுவிசும்பு ஏறிச்
சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-நிலத்துட் புகுந்து நீண்டவானில்
இவர்ந்து நீர்மீது திரியும் ஒரு சாரணன் தோன்ற ;
நீரிற் குளித்தல்போல்
நிலத்திற் குளித்து எனவும், நிலத்தில் திரிதல்போல் சலத்தில் திரியும்
எனவும் விரித்துரைத்துக் கொள்க. நிலத்திற் குளித்தல் முதலியன சித்தி
எனவும் இருத்தியெனவும் படும் ;1
"நீரினிற் பூவில் வானில் நினைத்துழியொதுங்குகின்ற, சாரணரெண்ம ராவார்
சமணரி லிருத்தி பெற்றோர்" என்பதுங் காண்க. இனி 2
"இருநிலம் புகுதலும் ஒருவிசும் பிவர்தலும், வருதிரை
நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும், மந்தர மேந்தலு மென்றிவை பிறவும்,
பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக், கண்டுமறிதும்" என்பதனால் நிலத்திற்
குளித்தல் முதலியன சில வித்தைகளாதலும் பெற்றாம்.
48--53. மன்னவன்
அவனை வணங்கி முன் நின்று - அரசன் அம் முனிவனை வணக்கஞ் செய்து முன்னே நின்று,
என் உயிரனையாள் ஈங்கொளித்தாள் உளள் - என் உயிர்போல்வாள் ஈண்டு நின்றும்
மறைந்தாள் உளள், அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள் சொல்லுமின் என்று
தொழ அவன் உரைப்பான் - அத் தன்மை யுடையாளாகிய நங்கை ஒருத்தியை அடிகள்
கண்டீரோ கூறுவீராக என்று பணிய அச் சாரணன் மொழிவான், கண்டிலேன் ஆயினும்
காரிகை தன்னை-அம் மங்கையை யான் இப்பொழுது கண்டிலேன் ஆனாலும், பண்டறிவுடையேன்
பார்த்திப கேளாய் - முன்னர் அவளைப்பற்றி அறிதலுடையேன் அரசனே கேட்பாயாக
; அறிவு உடையேன் - அறிதலுடையேன்.
54--9. நாக
நாடு நடுக்கின்று ஆள்பவன் - நாக நாட்டினை இடுக்கண் நீக்கி அரசு புரிவோனாகிய,
வாகை வேலோன் வளைவணன்- வெற்றி பொருந்திய வேற்படையினையுடைய வளைவணனின்,
தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய - மனைவியாகிய வாசமயிலை என்பாளது
வயிற்றில் உதித்த, பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் - பீலிவளை எனப்
பெயரிய இம் மங்கை பிறந்த அந்நாளில், இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக்
கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன் - பரிதி குல மன்னவ னொருவன்பாற்
கூடிக் கருப்பத்துடன் வருவாள் என்று சோதிட நூல்வல்லான் எடுத்துக்கூறினன் ;
நடுக்கு இன்று - நடுங்குதல் இல்லையாக. கணி - நிமித்திகன்.,
1
சூடா நிகண்டு. 2 ; 4. 2
பெருங்கதை.
3 - 4 : 86 - 90
|