பக்கம் எண் :

பக்கம் எண் :8

Manimegalai-Book Content
1. விழாவறை காதை

46--47. காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்-காய்ந்த
        குலைகளுடன் கூடிய பாக்கு மரமும் வாழை மரமும் வஞ்சி
        மரமும், பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் - மலர்
        களையுடைய கொடியும் கரும்பும் என்னுமிவற்றை நடுவீர் ;

    வஞ்சி - கொடியுமாம். கொடி வல்லி ஒரு பொருளன.

48--49. பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து-வலிசையாகவுள்ள
        திண்ணைகளிலிருக்கும் பசும் பொன்னாலாகிய தூண்களில்,
        முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் - முத்துமாலைகளை
        முறையாகத் தொங்க விடுமின் ;

தூணம் - தூண். பத்தியாகிய தூண் என்றலுமாம். முறையொடு- முறையால்.

50--51. விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் - விழாக்கள் நிறைந்த
        மூதூரின் வீதிகளிலும் மரத்தடிகளிலும், பழ மணல் மாற்றுமின்
        புதுமணல் பரப்புமின் - பழைய மணலை நீக்குமின் புதிய
        மணலைப் பரப்புமின் ;

மன்றம்-ஊர்க்கு நடுவாய் எல்லாரு மிருக்கும் மரத்தினடி என்பர்.

52--53. கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை
        மாடமும் வாயிலும் சேர்த்துமின்-துகிற் கொடிகளையும்
        காம்பினால் ஊன்றப்படுங் கொடிகளையும் கொடுங்கை
        களையுடைய மாடங்களிலும் வாயில்களிலும் சேர்ப்பீராக ;

கதலிகைக்கொடி, விலோதம் என்பன துகிற்கொடி வேறுபாடுகள்.

54--57. நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ்
        சதுக்கத்துத் தெய்வம் ஈறாக-இமைத்தலில்லாத நெற்றித் திருக்
        கண்ணையுடைய சிவபெருமான் முதலாக இப்பதியில் வாழ்கின்ற
        சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள கடவுளர்கட்கு, வேறு வேறு சிறப்பின்
        வேறு வேறு செய்வினை - வெவ்வேறு வகைப்பட்ட சிறப்புக்
        களோடு வெவ்வேறாகிய செய்வினைகளை, ஆறு அறி மரபின்
        அறிந்தோர் செய்யுமின்-செய்யும் நெறியினை அறிந்த முறைமை
        யினையுடைய அறிவுடையோர் செய்ம்மின் ;

விழிநாட்டம்-இமையா நாட்டம்; 1 "நுதல திமையா நாட்டம்" என்பது அகம். 2 " நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்" என்பர், இளங்கோவடிகளும். இனி, இறைவி கண் புதைத்தபொழுது நெற்றியிற் புறப்படவிட்டகண் என்றுமாம். விழி-விழித்த. சதுக்கம் - நான்கு தெருக் கூடுமிடம்- சிறப்பு - நைமித்திகமும், செய்வினை - நித்தமுமாம்; வெவ்வேறு சிறப்பினுக்கேற்ற செய்வினையுமாம். ஆறு - வேதத்தின் ஆறங்கமுமாம். அறிந்தோர் : முன்னிலை.


1 அகம். கடவுள் வாழ்த்து. 2 சிலப். 14 : 7.