பக்கம் எண் :

பக்கம் எண் :353

Manimegalai-Book Content
24. ஆபுத்திரனாடு அடைந்த காதை
 

76--82.   இராசமாதேவி - மன்னன் மனைவி, கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் கனவும் என்று உரவோர் துறந்தவை-கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் மனத்திற்றோன்றுங் களவும் தீயனவென்று அறிவுடையோரால் நீக்கப்பட்டவற்றை, தலைமையாகக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை-முதன்மையாகக் கொண்ட நினது கடையான பரத்தமைத் தொழிலை, புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி-புன்மையுடைத்தென அஞ்சி வெளிப்பட்ட மணிமேகலை, நின்னோடு போந்து நின்மனைப் புகுதாள் - நின்னுடன் வந்து நின் மனையை அடைதற் குரிய ளாகாள், என்னோடு இருக்கும் என்று ஈங்கிவை சொல்வுழி-என்னுடன் இருப்பாள் என்று இவ்வாறு கூறும்பொழுது ;

உரவோர் துறந்தனவாகிய கள் முதலியவற்றைப்புலைமை யென்று அஞ்சிப் போந்த வென்க. தலைமை இல் வாழ்க்கை - கடைப்பட்ட வாழ்க்கை ; 1 " மேலோ ராயினும் நூலோ ராயினும், பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும், பிணியெனக் கொண்டு பிறக்கிட்டொழியும், கணிகையர் வாழ்க்கை கடையே" என்பதுங் காண்க. பூங்கொடி புகுதாள் இருக்கும் என்று இராசாமாதேவி சொல்வுழி யென்க,.

82--8.   மணிமேகலை திறம் மாதவி கேட்டு-மாதவி மணிமேகலை காவலிலிருக்குஞ் செய்தியைக் கேட்டு, துணி கயம் துகள்படத் துளங்கிய வதுபோல்-தெளிந்த நீரினையுடைய குளம் புழுதி படிதலால் கலங்கிய தன்மைபோல, தெளியாச் சிந்தையள்-கலக்கமுற்ற உள்ளமுடையளாய், சுதமதிக்கு உரைத்து-அதனைச் சுதமதிக்குக் கூறி, வளி ஏறி கொம்பின் வருந்தி மெய்ந்நடுங்கி - காற்றா னலைக் கப்பட்ட பூங்கொம்பு போல வருந்தி உடல் நடுங்கி, அறவணர் அடி வீழ்ந்து ஆங்கவர் தம்முடன்-அறவணவடிகள் அடிமிசை வீழ்ந்து அவருடன், மற வேல் மன்னன் தேவி தன்பால் வர - வெற்றி வேல் வேந்தனது தேவியிடம் வர ;

துணி - தெளிந்த. துளங்குதல் - நடுங்குதல்; ஈண்டுக் கலங்குதல். துகள்பட - சோறுண்டாக என்றுமாம். தெளிந்த உள்ளம் கலங்கிய தென்பது உவமையாற் பெற்றாம்:

89--92.   தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்-அறவண முனிவரைக் கண்டவளவில் இராசமா தேவியும் சிலதியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும், எழுந்து எதிர் சென்றாங்கு - எழுந்து எதிரே சென்று, இணை வளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க - வணங்குந் தகுதியுடைய அறவணர் இணையடிகள் இரண்டு வளைய லணிந்த


1 சிலப் 11 : 180-3.