கூறின ரென்க. செய்கை யென்பதனை
வருவித்து, செய்கை இருவகையால் தோன்றிக் காட்டும் என முடிக்க.
123--34. தீவினை
என்பது யாது என வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் - தீவினை எனப்படுவது
யாது என்று வினவினால் ஆராய்ந்த வளையல்களை அணிந்த நங்காய் அதனைக் கேட்பாயாக,
கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் - கொலையும்
களவும் காமமாகிய கொடிய விருப்பமும் என்று உடலின்கண் தோன்றுவன மூன்றும்,
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்-பொய்
குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்று சொல்லிற் பிறப்பன நான்கும், வெஃகல்
வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளந்தன்னில் உருப்பன மூன்றும் எனப்
பத்து வகையாம் - விரும்பல் சினத்தல் மயக்க மெய்துதல் என மனத்தின்கண்
எழுவன மூன்றும் எனப் பத்து வகையாகும், பயன்தெரி புலவர் இத்திறம் படரார்
- வினைகளின் பயனை உணர்ந்த அறிஞர் கொலை முதலிய இத் தீய வழிகளிற் செல்லார்,
படர்குவர் ஆயின் - யாரேனும் அந்நெறிகளிற் செல்வராயின் அங்ஙனம் செல்லுபவர்,
விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர்
- விலங்கும் பேயும் நரகருமாய்க் கலக்கமுற்ற உள்ளக் கவலையின்கட்படுவர்;
காமத் தீவிழைவு - இணை விழைச்சு.
எனவென ஒரு சொல் வருவிக்க. உலையா உடம்பு - தளராத வுடம்பு. குறளை - கோட்சொல்,
பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களில் ஒன்றும் பயவாத சொல், வெஃகல்
- விரும்புதல், பொல்லாக்காட்சி - மயக்க வறிவு. வெஃகல் முதலிய மூன்றும்
முறையே காமம் வெகுளி மயக்கம் எனப்படும். படர் குவராயின் அங்ஙனம் படர்வோர்
என விரித்துரைக்க.
135--40.நல்வினை
என்பது யாது என வினவின் - நல்வினை எனப்படுவது எத்தகைத்து என்று வினவினால்,
சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி-கூறப்பட்ட பத்துவகைக் குற்றங்களினின்றும்
நீங்கி, சீலம் தாங்கித் தானம் தலை நின்று - சீலத்தை மேற்கொண்டு தானம்
வழங்குதலில் நிற்றல்; அங்ஙனம் நிற்போர், மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து
- உயர்வுடையன என்று வகுக்கப் பட்ட மூவகையினை யுடைய, தேவரும் மக்களும் பிரமரும்
ஆகி-வானவர் மக்கள் பிரமர் என்போராய், மேவிய மகிழ்ச்சி வினைப் பயன்
உண்குவர் - பொருந்திய நல்வினைப் பயனை அனுபவிப்பர்.
சீலம் - விலக்கியன வொழித்து
விதித்தன செய்தல். கள்ளுண்ணாமை முதலிய ஐந்தும் ஐவகைச் சீலம் எனப்படும்;
இவை இல்லறத்தார்க்குரியன. ஏனோர்க்கு இவற்றுடன் மூன்றும் ஐந்தும் கூட்டி
எட்டும்
|