பக்கம் எண் :

பக்கம் எண் :370

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 

இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை - சம்புத் தீவின்கண் இம்மங்கையை ஒப்பவர் எவரும் இல்லை, இவள் திறமெல்லாம் - இவளுடைய வரலாறு அனைத்தையும், கிள்ளிவளவனொடு கெழுதசை வேண்டி-கிள்ளிவளவனுடன் நட்புக் கொள்ளுதலை வேண்டி, கள் அவிழ் தாரோய்-தேன் பொருந்திய மலர் மாலையினை யுடையோய், கலத்தொடும் போகிக் காவிர்ப் படப்பை நன்னகர் புக்கேன-கலத்துடன் சென்று காவிரியின் பக்கத்ததாகிய புகார்நகரத்தை யடைந்தேன், மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு ஓதினன் என்று - அறவண முனிவன் இவளது பிறப்பினை அறிந்தவாறு மொழிந்தனன் என்று, நான் அன்றே உரைத்தேன்-யான் மீண்டு வந்த அந் நாளிலேயே கூறினேன் ;
 

படப்பை - பக்கம்; தோட்டக்கூறுமாம். 1 "காவிரிப் படப்பைப்பட்டினம்" என்றார் இளங்கோவடிகளும். தாரோய்! கெழுதகை வேண்டிப் போகி நன்னகர் புக்கேனாகியயான் அறவணன் இவள் பிறப்பு ஓதினன் என்று இவள் திறமெல்லாம் அன்றே யுரைத்தனன் என்க.

19--24 ஆங்கவள் இவள் அவ் அகல் நகர் நீங்கி-அவள் இந்நங்கையே அவ் வகன்ற்தினின்றும் நீங்கி, ஈங்கு வந்தனள் என்றலும்- ஈண்டு வந்திருக்கின்றனள் என வுரைத்தலும், இளங்கொடி-மணிமேகலை, நின்கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது - நினது கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் வந்தடைந்தது, மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் - மிகப் பெருஞ் செல்வத்தால் மயங்கினையாகலின் நீ அதனை அறியாய், அப் பிறப்பு அறிந்திலை ஆயினும்-நினது முற்பிறப்பினை அறிந்திலாயேனும், ஆ வயிற்று இப்பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ - பசுவின் வயிற்றிலுதித்த இப் பிறப்பினையும் அறிந்திலையே என் செய்தனை ;
 
உரைப்போனாகிய கஞ்சுகன் ''ஈங்கு வந்தனள்'' என்றலும் என்க. அப் பிறப்பு - முற்பிறப்பு; சாலி வயிற்றிற் பிறந்த பிறப்பு.
 
மணிப்பல்லவம் வலங்கொண்டால் அல்லது - மணிபல்லவத் தின்கட் சென்று புத்த பீடிகையை வலம் வந்தாலன்றி, பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்-பற்றுக்களையுடைய பிறவியினது தன்மையை அறியாய் ஆகலின், ஆங்கு வருவாய் அரச நீ என்று-அரசனே நீ ஆண்டு வருவாயாக என்று, அப் பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று - மணங்கமழும் மாலையினையுடைய அம் மன்னவன் முன்னர்க் கூறி, மையறு விசும்பின் மடக்கொடி எழுந்து - இளங்கொடி களங்கமற்ற வானூடு எழுந்து ;

பிணிப்பு - பற்று, கட்டு. கமழ் பூந்தாரோன் என்க

30--6. வெய்யன் குடபால் வீழா முன்னர் - கதிரவன் மேற்றிசையிற் சென்று வீழ்வதன் முன்னம், வானின்று இழிந்து-விசும்பினின்


1 சிலப். 15: 151