பக்கம் எண் :

பக்கம் எண் :373

Manimegalai-Book Content
25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை
 
இருளறக்காட்டும் என்று எடுத்து உரைந்து-நின் பிறவியினையும் மயக்கமறக்காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய, அன்றே போன்றது அருந்தவர் வாய்மொழி இன்று எனக்கு என்றே ஏத்தி வலங்கொண்டு-அன்றுரைத்த நுமது வாய்மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது என்று துதித்து வலங்கொண்டு, ஈங்கிவள் இன்னணம் ஆக - இவ்விடத்து மணிமேகலை இப்படியிருக்க;

பெருமகற்கு அமைத்து - பெருமகன் எழுந்தருளுதற் பொருட்டமைத்து என்றுமாம். ஆயிழை, அருந்தவர் என்பன முன்னிலக்கண் வந்தன. உரைத்ததாகிய வாய்மொழி யென்க. வாய்மொழி இன்று எனக்கு அன்று நேரிலே கேட்டாற் போன்றது என்றுரைத்தலுமாம்.

68--79.   இறைவனும் - புண்ணியராசனும், ஆங்கப் பொழில் விட்டு அகநகர் புக்கு - அச்சோலையை விட்டு நகரத்துள்ளே சென்று, தந்தை முனியா தாய் பசுவாக வந்த பிறவியும், தாதை முனிவனாகவும் தாய் பசுவாகவும் வந்த பிறவியையும், மாமுனி அருளால் குடர்த்தொடர் மாலை சூழாது - தவமுனிவன் திருவருளால் குடராகிய தொடர்மாலையாற் சுற்றப்படாமல், ஆங்கோர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் - பசுவின் வயிற்றினுள்ளே பொற் றகட்டினலாய ஒரு முட்டையின்கண் அடங்கிய வண்ணத்தினையும், மாமுனி அருளால் மக்களை இல்லோன் பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் - மக்கட்பே றில்லாதவனாகிய பூமிசந்திரன் முனிவர் திருவருளால் தன்னைக் கொணர்ந்த திறத்தினையும் ஆய்தொடி அரிவை அமரசுந்தரி என்கின்ற, தாய்வாய் கேட்டுத் தாழ்துயர் எய்தி - தாயினிடமாகக் கேட்டு அறிந்து மிக்க துன்பத்தை யடைந்து, இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்-சென்ற பிறப்பின்கண் தாய் செய்த்தனையும், பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து - இப்பிறப்பின் இயல்பினையும் எண்ணி;

முனி - மண்முக முனிவன், 1 "மண்முக னென்னு மாமுனி யிடவயின்" என முன் வந்தமை அறிக. அடர்-தகடு. அமர சுந்தரி-பூமி சந்திரன் மனைவி. இறந்த பிறவியின் யாய்-அபஞ்சிகன் மனைவியாகியசாலி.

80--92. செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க-போர் புரியும் வேற்படையினையுடைய வேந்தர் தம் குறை கூறுதற்கேற்ற காலத்தினை நோக்கி வாட, அரைசு வீற்று இருந்து புரையோர்ப்பேணி-பெரியோரை விரும்பித் துணைக்கொண்டு அரசு புரிந்து செம்மாந்திருந்து, நாடகம் கண்டு - நாடகத்தினைக் கண்டு, பாடற்பான்மையின் கேள்வி இன்னிசை கேட்டு, பாடுதன் முறைமையுடைய கேள்விபொருந்திய இனியிசையைக் கேட்டு, தேவியர் - மனைவியரின் ஊடற் செவ்வி பார்த்து - ஊடுஞ் செவ்வியை நோக்கி,


1 மணி. 15:4.