பக்கம் எண் :

பக்கம் எண் :388

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை

எழுந்து என்பதன் பின் அவாய் நிலையால் சில சொற்கள் வருவித் துரைக்கப்பட்டன. கடவுள் எழுதிய-தெய்வமாக இயற்றிய. கோவலன் கொடையில் மேம்பட்டவ னென்பது, தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ வுணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பினியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்தனன் என்பது முதலிய வரலாற்றானறியப்படும். இதனைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையானறிக. படிமம்-படிவம், வடிவம். கண்ணகி கோட்டத்துக் கோவலனுக்குப் படிவம் அமைக்கப்பட்டதென்பது இதனாற்பெற்றாம். அற்புக்கடன்-தலையன்பினால் கணவனிறப்ப உடனறித்தலும் தீப்பாய்தலுமாம். நற்றவம் படர்தலாவது கைம்மை நோன்பைநோற்று உடம்பைவருத்துதல். கண்ணகி கற்பையே கடனாகக் காண்டவளென்தபனை, 1 "கற்புக்கடம் பூண்ட வித்தெய்வமல்லது, பொறைபுடைத் தெய்வம் யாங்கண் டிலமால்" 2 "கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த, பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்" என்பவற்றானறிக. ஈண்டுக் கற்பென்றது மறக் கற்பினை. நும் கடன் முடித்தது என்றது மதுரையை அழற்படுத்திப் பதினான்காம்நாளிற் கோவலனைச் சென்று கூடியதை உணர்த்திற்று. "அற்புக் கடனில்லாது...முடித்தது" என்பவற்றின் கருத்து 3 "காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்காது, இன்னுயி ரீவர் ஈயா ராயின், நன்னீர்ப்பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயினன்பரோ, டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர், பத்தினிப் பெண்டிர்" என, இந்நூலுள் முன்பு வந்திருந்தலால் விளக்கமாம்.

10--3.   ஒரு பெரும் பத்தினிக்கடவுள் ஆங்கு உரைப்போள்-ஒப்பற்ற பெருமையினையுடைய பத்தினிக் கடவுளாகிய கண்ணகி அப்பொழுது கூறுவாள், எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது - என் காதலன் உற்ற கடுந்துன்பத்தைப் பொறாமல், வெம்மையின் மதுரை வெவ்வழல் படுநாள்-யான் சினத்தினால் மதுரை நகரைக் கொடிய எரிமூட்டிய நாளில், மதுராபதி எனும் மாபெருந்தெய்வம் - மதுராபதி யென்று கூறப்படும் மதுரையின் அதிதேவதையாகிய பெரிய தெய்வம் தோன்றி"

இடுக்கண் - துன்பம்" ஈண்டுக் கொலை. வெம்மை - வெகுளி. அழற்படுநாள் - அழற்படுத்து நாளில்" படுதல்: பிறவினைப் பொருட்டு- ''எம்மிறைக்கு'' என்பது முதலியன கண்ணகி கூற்று.

14--28.   இது நீர் முன்செய் வினையின் பயனால்-இதுநீவிர் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகும், காசுஇல் பூம்பொழில் கலிங்க


1 சிலப். 15: 163-6. 2 சிலப். 29: ''தற்பயந்தாள்.'' 3 மணி. 2: 42-48.