பக்கம் எண் :

பக்கம் எண் :389

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை

நன்னாட்டு - குற்றமற்ற மலர்சோலைகளையுடைய கலிங்கநாட்டில். தாய மன்னவர் வசுவும் குமரனும்-ஞாதியாரகிய வசு குமரன் என்னும் மன்னர்கள், சிங்கபுரமும் செழுநீர்க் கபிலையும் அங்காள்கின்றோர்-சிங்கபுரத்தையும் நீர்வளம் மிக்க கபிலைப்பதியையும் ஆண்டு வருகின்றவர்கள், அடல் செருவுறுநாள் - தம்முட் பகைமையினால் வலிய போரினைச் செய்துவருநாளில், மூவிரு காவதம் முன்னுநர் இன்றி - ஆறுகாத எல்லை முற்படுவோர் இல்லையாக, யாவரும் வழங்கா இடத்தில் - எவரும் செல்லாத இடத்தில், பொருள் வேட்டு - பொருளீட்டுதலை விரும்பி, பல்கலன் கொண்டு பலரறியாமல் எல்வளையாளோடு அரிபுரம் எய்தி-பல அணிகலன்களையும் கொண்டு பலரும் அறியாமல் ஒளிபொருந்திய வளையினையுடைய மனைவியுடன் சிங்கபுரத்தை யடைந்து, பண்டக்கலம் பகர் சங்கமன் தன்னை - பொன்னாலாகிய அணிகலன் விற்கின்ற சங்கமனை, கண்டனர் கூற - கண்டோர் உரைக்க, தையல் - நங்கையே, நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத் தொழிலாளன் - அரசன் தொழில் புரிவோனும் நின் கணவனுமாகிய பரதன் என்னும் கொடுந் தொழிலையுடையோன், தெற்றெனப் பற்றி-விரைவாகப் பிடித்து, ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு - அரசனுக்கு இவன் மாற்றானின் ஒற்றனாவான் என மொழிந்து, குற்றமிலோனைக் கொலைபுரிந்திட்டனன்-குற்றமற்றவனாகிய அவ் வணிகனைக் கொலை செய்தனன்;

இது நீர்'' என்பது முதலியன, மதுரைமா தெய்வம் தனக்குக் கூறியவற்றைப் பத்தினிக் கடவுள் கொண்டு கூறுவனவாகும். பயனால்: ஆல்: அசை. ''வினையின் பயன்'' எனச் சுருங்க வுரைத்துத் தெய்வம் பின் அதனை விளங்க வுரைக்கின்றது. வசு சிங்கபுரத்தையும் குமரன் கபிலையையும் ஆள்கின்றார் என நிரனிறையாகக்கொள்க. ஆள்கின்றோர், பெயர். அரிபுரம் - சிங்கபுரம். பண்டக்கலம்-பண்டு அக்கலம் எனப் பிரித்துரைத்தலுமாம். தையல்: விளி. தெற்றென - விரைவாக, மன்னற்கு உரைத்து என்க. புரிந்திட்டனன் - புரிவித்தனன்.

29-34.   ஆங்கவன் மனைவி அழுதனள் அரற்றி-அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் அழுது புலம்பிக்கொண்டு, ஏங்கிமெய்பெயர்ப் போள் இறுவரை ஏறி - ஏக்கத்துடன் பெரிய மலையின் மீதேறி விழுந்து உயிர் துறப்பவள், இட்டசாபம் கட்டியதாகும் - எனக்கு இம்மையில் இன்னல் புரிந்தவர் மறுமையில் இக்கதி யுறுவாராக என்று கூறிய சாபமானது இப்பொழுது பந்தித்ததாகும், உம்மை வினைவந்து உருத்தல்ஒழியாது எனும்-பழவினை வந்து பற்றுதல்நீங்காது என்கின்ற, மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்-உண்மை மொழிகளை உரைத்த பின்னரும், சீற்றங்கொண்டு செழுநகர் சிதைத்தேன் - சினங்கொண்டு அவ் வள நகரத்தினை அழித்தேன்;