பக்கம் எண் :

பக்கம் எண் :394

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை
 

விசித்திரன் முதலிய ஆரிய அரசர் பலராகிய அனைவரையும் வென்று, அவர் அம்பொன் முடிமிசை - அவர்களுடைய அழகிய பொன்முடி யணிந்த தலைமீது, சிமையம் ஓங்கிய இமைய மால் வரை - கொடுமுடி உயர்ந்து பெரிய இமய மலையினின்றும் வெட்டி யெடுத்த, தெய்வக் கல்லும்-தெய்வப் படிமம் அமைத்தற்குரிய கல்லையும், தன் திரு முடி மிசைச் செய்பொன் வாகையும் சேர்த்திய சேரன் - தனது அழகிய முடியின் மீது தனது வெற்றியின் அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட வாகை மலரையும் வைத்த சேரனும்;

இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. ''செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க'' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர் ; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவாவஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1 ''''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'''' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும். சேரன் செங்குட்டுவன் வடக்கே போர்மேற் சென்ற வழியிலிருந்த நாடுகளின் பரப்புகள், அவன் சேனையிலிருந்த மலை போன்ற பெரிய யானைகளின் கூட்டம் அங்கங்குந் திரண்டு சென்றபோது அவன்றன் மலைநாடுபோற்றோன் றின வென்க. அடைகரை - வெள்ளத்தால் மணல் அடைந்த கரை. வங்க நாவி: இருபெயரொட்டு. பல வேந்தரென்றது, கனகன் விசயன் என்பாரொடு கூடிச் செங்குட்டுவனை எதிர்த்த உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய ஆரிய அரசர் பலரை. அனைவரை என்றார், அவரனைவரையும் சேரன் ஒருங்கு வென்றமையின் ; உம்மை விரித்துக் கொள்க. ''அம் பொன் முடிமிசை'' என்ற விடத்துப் பொன் ஆகு பெயர். வாகை - வாகைமலர்; போரில் வெற்றி பெற்றோர் அதற்கு அறிகுறியாக அந்நேரத்திற் சூடும் மலர். அரசர் அதனைப் பொன்னாற் செய்து அணிந்து கொள்வ ராதலின், ''செய் பொன் வாகை'' எனப்பட்டது. அவரம்பொன் முடிமிசைத் தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச் செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்'' என்க. சேரன் செங்குட்டு வனது இவ் வெற்றி வரலாற்றைச் சிலப்பதிகாரத்தின் கால்கோட் காதை நீர்ப்படைக் காதைகளால் அறிக.

91.   வில்திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க-வில்வலியை விரும்பி னோனாகிய செங்குட்டுவனது புகழ் விளங்குமாறு,


1 சிலப். 26: 50-1.