பக்கம் எண் :

பக்கம் எண் :395

Manimegalai-Book Content
26. வஞ்சிமா நகர் புக்க காதை
 

திறல் - வலி; வெய்யோன் - விரும்பினோன் ; 1 ''''வெற்றி விறல் வெய்யோன்'''' என்றார் புறப்பொருள் வெண்பாமாலையினும்.

92-4. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க.

கொடி, வஞ்சிக்கொடி; 2 ''''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'''' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் ''திருந்து நல் ஏது'' என்றார். வாய்மை நான்கும் 3 மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ''பொருந்து நால் வாய்மை'' எனப்பட்டது. ''நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்'' என்பது.

அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, ''அருளல் வேண்டும்'' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ''இன்னது இவ் வியல்பு'' என எடுத்துரைத்தலும், மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க.


வஞ்சிமாநகர் புக்க காதை முற்றிற்று.

________

மணிமேகலை பதிகமுதல் இக்காதை வரை ஆசிரியர், நாவலர்

பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களெழுதிய

உரை முற்றிற்று.


1 புறப் - வெ. 68. 2 மணி. 28 ; 101-2. 3 மணி. 2 : 4-7 : 26 : 48.