ஐவகைச் சமயமென்று அவர்
கூறுதல் ஈண்டுக் குறிக்கத்தக்கது. இக் கூறியவற்றால், மணிமேகலை யாசிரியர்
காலத்தே தமிழகத்தில் அறுவகைச் சமயங்கள் இருந்தமை விளங்கும். நாவரசர்,
ஞானசம்பந்தர் முதலாயினர் காலத்தே விளங்கியிருந்த பாசுபதம், காபாலம் முதலிய
சமயங்கள், இம்மணிமேகலை யாசிரியர் காலத்தே இருந்தில. வேதவாதத்தின் வேறாகச்
சைவமும் வைணவமும் பிரித்துக் கூறப்படுதல் குறிக்கத்தக்கது. அளவை வாதமும் இப்போது
மறைந்தொழிந்தன; ஏனைய வற்றுள் நிகண்டவாதம் மட்டில் சைனசமயமென்ற பெயரால்
நிலவுகிறது: பௌத்தம் அதனினும் குறைந்து விட்டதே யன்றி, சீனம், சப்பான்,
சயாம், பர்மா, இலங்கை முதலிய நாடுகளிற் பரவியுள்ளது. பிற சமயங்கள் இருக்குமிடம்
தெரியாது நூலளவாய் ஒடுங்கிவிட்டன. இக்காலத்து நிலவும், சைவம், வைணவம், வேதாந்தம்
முதலிய சமயங்களில், இச்சமயங்களில் ஏற்புடைய கருத்துக்களும் கொள்கைகளும்
கலந்துகொண்டதனால் மறைந்தன என்று கொள்ளினு மமையும்.
மணிமேகலை, உரைமினோ வெனச்
சார்ந்து, அளவைவாதியை இயம்பென, என்றவன் தன்னைவிட்டு, சைவவாதி நேர்படுதலும்,
எப்படித் தென்ன, அவன் உரைத்தனன்; பிரமவாதி என்றனன்; கடல் வணன் புராணம்
ஓதினன் உரைத்தனன்; வேதியின் உரையின் விதியும் கேட்டு, யாதினும் இசையாது
இவர் உரையென, புராணனை யாதென, அவன் வகையிது என்ன, விட்டு, நிகண்டவாதியை
விளம்பென, விளம்பலுறுவான் என்றனன்; அவன்பின் உரைப்போன் செப்பிய திறமும்
கேட்டு, வைசேடிக, உரையென்ன, உரைத்தனன்; உடனே பூதவாதி யைப் புகல் நீ என்ன,
என்றலும், கேட்டு, உரைக்கிலேன் என்று, நக்கிடுதலும், என்றலும், என, உரைத்து,
அறிந்தனள் எனக்கூட்டி, வினை முடிவு செய்க.
சமயக்கணக்கர்
தந் திறங்கேட்ட காதை முற்றிற்று.
|