பக்கம் எண் :

பக்கம் எண் :456

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை
 

வேண்டாக்காற் குறைத்தும் தரவல்ல இயந்திரங்கள் அமைந்த பொய்கைகளில் மைந்தரும் மகளிரும் நீராடுதலால் அவரணிந்த சாந்து கழுவுற்றுக் கலந்தோடும் நீரும் புவி காவலன்தன் புண்ணிய நன்னாள் சிவிறியுங் கொம்பும் சிதறு விரை நீரும்-மன்னவன் பிறந்த நன்னாளில் சிவிறியும் கொம்புமாகிய கருவிகள் கொண்டு ஒருவர்மேலொருவர் வீசிகின்ற நறுமண நீரும், மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல வுபாசகர் செங்கை நறுநீரும் - மேன்மை பொருந்திய முனிவர் தம் திருவடிகளை ஐவகைச் சீலங்களையுமுடைய உபாசகர்கள் தங்கள் சிவந்த கைகளால் விளக்கும் நன்னீரும், அறஞ்செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்புவார் நீரும்- இல்லறம் புரியும் மாந்தர்கள் அமைத்த அகில் முதலியவற்றைப் புகைத்தலா லெழுந்த நறும்புகை கமழும் தண்ணீர்ப் பந்தர்களில் குடங்களிலிருந்து ஊற்றுகின்ற நீரும், உறுப்பு முரண் உறாமல் கந்தவுத்தியினாற் செறித்தரைப்போர் தஞ்செழுமனை நீரும்-ஊறப்படும் உறுப்புக்கள் மாறுபடாமல் விரைக்கலவைக்குரிய முறைப்படியே சேர்த்து அரைப்பவருடைய வளம் மிக்க மனைகளின் நீரும், என்று இந்நீரே எங்கும் பாய்தலின்-என்ற இவ்வகைப்பட்ட நீரே யாண்டும் பாய்தலினால், கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவொழி உடம்பினவாகி-பகைமையிற் றழும்பிய கராம் இடங்கர் என்ற முதலையினங்களும் மீன்களும் தம்மீது பொருந்திய புலால் நாற்றம் நீங்கிய உடலினையுடையவாகி, பொறிவண்டார்ப்ப தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூ மிசைப் பரந்து - பொறிகளையுடைய வண்டினங்கள் தேனுண்டாரவாரிக்க, தாமரை குவளை கழுநீர் ஆம்பல் முதலிய பூக்கள் நீர் மேலே பரவப் பெற்று, இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து - வானவில்லைப்போல விளங்குகின்ற அகழியாற் சூழப்பட்டு ;

நெய் விரவிய கூந்தலைப் பசை நீங்கக் கலவை தேய்த்தலைத்தலால் மகளிராடிய நீரை, "கருங்குழல் கழீஇய கலவை நீர்" என்றார். எந்திர வாவி, எந்திரத்தால் நீரைப் பெருக்குதலும் குறைத்தலுமுடைய வாவி. பூசிய சாந்தம் நீராட்டில் கழுவப்படுவதுபற்றி, கழுவிய நீர் "சாந்து கழி நீர்" எனப்பட்டது. நாட்டு மன்னனது பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கு ''வெள்ளணி'' யென்றும் ''நாண்மங்கல'' மென்றும் வழங்கும். உபாசகர், ஐவகைச் சீலத்தை மேற்கொண்டு அறம்புரிவோர். இல்லறத் தாராயினும், சீலமும் தானமும் சிறந்து தோன்ற அறம் புரிவதுபற்றி, உபாசகர் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். மேலை, மேன்மை; ஐ: பண்புப் பொருண்மை குறித்து நின்றுது; சாரியையுமாம். உறுப்புக்களாவன, "நேர்கட்டி செந்தே னிரியாசம் பச்சிலை, ஆர மகிலுறுப்போ டாறு" (சிலப். 514) என அடியார்க்கு நல்லார் காட்டுமாற்றாலறிக கந்தவுத்தி, விரைப் பொருளைத் தக்காங்குக் கலந்து செய்யும் முறை. ஈண்டுக் கூறிய நீர்வகை பலவும் சுருங்கை வழியே சென்று, கிடங்கிற்குள் வீழ்தல்