பக்கம் எண் :

பக்கம் எண் :457

Manimegalai-Book Content
28. கச்சிமாநகர் பக்க காதை
 

தோன்றச் "சுருங்கைத்தூம்" பென முதற்கண் நிறுத்திக் கூறினார். கராம், இடங்கர் என்பன முதலை வகை. தாமரை முதலிய பூக்கள் நீர்ப்பரப்பின் மேலே மலர்ந்து நிற்பனவாதலால், "மிசைப் பரந்து" என்றார். பல்வகை வண்ணங்கொண்டு விளங்கலின், இந்திர வில்லை யுவமம் கூறினார்.

23--8.  வந்தெறி பொறிகள் வகை மாண்புடைய-பகைவர் முற்றிய பொழுதில் முன் வந்து பகையெறியுந் தன்மையுடைய இயந்திரங்களின் வகையால் மாட்சிமையுடைய, ஓங்கிய கடிமதில் இடைநிலை வரைப்பில்-உயர்ந்த காவலையுடைய மதிலின் இடையேயுள்ள நில வெல்லையில், பசுமிளை பரந்து - பசிய காவற்காடு பரவப்பெற்று ; பல்தொழில் நிறைந்த-பலவகைத் தொழிலும் நிரம்பிய, வெள்ளிக் குன்றம் உள்கிழிந்தன்ன நெடு நிலைதோறும் நிலாச்சுதை மலரும் - வெள்ளி மலையை நடுவே பிளந்தாற்போல உயரிய நிலைகள்தோறும் நிலவினைப் போல வெள்ளிய சுதை விளங்கும்; கொடிமிடை வாயில் குறுகினள் புக்கு-கொடிகள் செறிந்த வாயிலை அடைந்து புகுந்து ;

எந்திரவகைகளாவன : நூற்றுவரைக் கொல்லி, அரிநூல்பொறி விற்பொறி, கொக்குப்பொறி, கூகைப்பொறி முதலியன. இவற்றின் வகையைச் சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய நூல்களுட் காண்க. ஓங்கிய கடிமதில் என மாறுக. பஃறொழில் நிறைந்த நெடுநிலை, வெள்ளிக் குன்றம் கிழிந்தன்ன நெடுநிலை யென வியையும். மலர்தல், ஈண்டு விளக்கங் குறித்து நின்றது. மிடைதல், செறிதல். குறுகினள் : முற்றெச்சம்.

26--34.  கடைகாப்பு அமைந்த காவர் மிடைகொண்டு இயங்கும் வியன்மலி மறுகும் - வாயில் காத்தற்கு அமைந்த காவலாளர்கள் நெருங்கி யிருக்கும் அகன்ற பெரிய வீதியும், பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் - பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணிகரும், மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் - இறைச்சி விற்போரும் வெற்றிலை விற்போரும் பஞ்சவாசம் விற்போரும் என்ற இவர்களையுடைய வீதியும் ;

பெருஞ் செல்வருடைய பெருமனைகளில் கடையில் காவல் புரியும் வாயிலாளர்களைக் "காவலாளர்" என்றார். மக்களின் போக்குவரவு மிகுதி தோன்ற, "மிடைகொண்டு" என்றார். மிடைந்து அகன்ற தெருவாதலின், "வியன்மலி மறுகு" எனப்பட்டது. பல்வேறு வகையான மீன்களை விற்போர் பலராதல் தோன்றப் பன்மீன் வினைஞர் என்றார். வெள்ளுப்பு என்புழி வெண்மை இயல்பாய பண்பு குறித்தது. நொடையாட்டியர் - விலைக்கு விற்பவர் ; "கள்ளோர் களிநொடை நவில"