[மாதவி வயந்தமாலைக்குக் கூறிய இன்னாவுரையின்
வாயிலாக மணிமேகலைக்குப் பரிபாக காலம் (ஏது நிகழ்ச்சி) வந்துற்றது ஆகலின்,
அவள், தன் தந்தைக்கும் தாயாகிய கண்ணகிக்கும் மதுரையில் நேர்ந்த கொடுந்
துன்பம் தன் காதுகளைச் சுடுதலால் அழுது கண்ணீரால்தான் தொடுக்கின்ற மாலையை
நனைத்துக் கொண்டிருந்தனள் ; மாதவி அது கண்டு அவளது கண்ணீரைத் துடைத்து,
அவள் துயரினை ஒருவாறு மாற்றக் கருதி, ''இம்மாலை நின் கண்ணீரால் தூய்மை
யொழிந்தது ; ஆதலின் வேறு மாலை தொடுத்தற்கு நீயே சென்று நன்மலர் கொணர்வாய்''
என்றனள். அப்பொழுது அவளுடன் மலர் தொடுக்கும் சுதமதி அதனைக் கேட்டுத் துயரொடுங்
கூறுவாள் : "மணிமேகலையின் கண்ணீரைக் கண்டனனாயின் காமன் தன் படைக்கலத்தை
எறிந்து விட்டு நடுங்குவன் ; அவளை ஆடவர் புறத்தே காண்பாராயின் விட்டு நீங்குதலுண்டோ?
அன்றியும் யான் இந்நகரத்திற்கு வந்த காரணத்தையும் கேட்பாயாக ; சண்பை
நகரத்துள்ள கௌசிகன் என்னும் அந்தணன் மகளாகிய யான் சோலையில் தனியே
மலர் கொய்யும் பொழுது இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும்
விஞ்சையன் என்னை எடுத்துச் சென்று தன் வயமாக்கிப் பின்பு இந்நகரிலே என்னை
விட்டு நீங்கினன் ; மகளிர் தனியேபோய் மலர்கொய்தலால் வரும் ஏதம் இத்தகையது
; ஆதலால் மணிமேகலை தனியே சென்று பூப்பறித்தல் தவறாகும் ; பூக்கொய்ய
இலவந்திகைச் சோலைக்குச் சென்றால் அரசன் பக்கத்திலுள்ளவர் ஆங்கிருப்பர்
; உய்யானத்திற் சென்று பறிக்கலா மெனில், வானோராலன்றி மக்களால் விரும்பப்படாதனவும்
வண்டு மொய்க்காதனவுமாகிய வாடாத மலர்மாலைகளை மரங்கள் தூக்குதலால், கையிற்
பாசமுடைய பூதத்தாற் காக்கப்படுவதென்று கருதி, அதன்கண் அறிவுடையோர் செல்லார்
; சம்பாதி வனமும், கவேர வனமும் தீண்டி வருத்தும் தெய்வங்களாற் காக்கப்படுதலின்
அவற்றின் கண்ணும் அறிவுடையோர் செல்லார் ; புத்த தேவன் ஆணையால் பல மரங்களும்
எப்பொழுதும் பூக்கும் உவவனம் என்பதொன்றுண்டு; அவ்வனத்தினுள்ளே பளிங்கு
மண்டபம் ஒன்றுளது; அதனுள்ளே சில உண்மைகளைத் தெரிவித்தற் பொருட்டு மயனால்
நிருமிக்கப்பட்ட தாமரைப் பீடிகை ஒன்றுளது ; அவ் வனத்திலன்றி நின்மகள்
வேறு வனங்களிற் செல்லுதற்குரியளல்லன் ; அவளுடன் யானும்போவேன் ;" என்று
கூறிச் சுதமதி மணிமேகலையுடன் வீதியிற் செல்லும்பொழுது, உண்ணாநோன்பி யொருவனைத்
தொடர்ந்து கள்ளுண்ணுமாறு வற்புறுத்தும் களிமகன் பின்செல்வோரும், பித்தனொருவனுடைய
விகாரச் செய்கைகளைக் கண்டு வருந்தி நிற்போரும், பேடு என்னுங் கூத்தினைக்
கண்டு நிற்போரும், மாளிகைகளில் எழுதப்பட்டுள்ள கண்கவர் ஒவியங்களைக்
கண்டு நிற்போரும், சிறு தேரின்மேலுள்ள யானையின் மீது சிறுவர்களை ஏற்றி
''முருகன்விழாக் காண்மின்'' என மகளிர் பாராட்டுதலைக்
|