நாடெங்கும் எதனால் இவ்வறுமைக் காலம் வந்தெய்தியது என்று அறியாது மயங்குவேனாயினேன்;
மணிமேகலை மாதவனுருவில் தோன்றினாளாயினும்
கச்சிநகர்க் கண் இருந்த கந்திற்பாவை யுரைத்திருந்தபடியால், அதுவே வாயிலாக
அவளைக் கஞ்சுகனும் வேந்தனும் தெரிந்துக்கொண்டனரெனக்கொள்க. அதனாற்றான்
''''நலத்தகை நல்லாய்'''' என்றான். அரசு கோல்கோடலும் மாதவர் நோன்பு கெடலும்
மகளிர் கற்புக்குறைபடலும் நாடு நலங் குன்றுதற் கேதுவாகலின், ''''கோல் கோடியோ
தவம் பிழைத்தோ கற்புக் குறைபட்டோ நன்னாடெல்லாம் அலத்தற் காலையாகியது''''
என்றும், இக்குறையினைக் காண முயன்றும் அம்முயற்சி பயன்படாமையின், ''''அறியேன்''''
என்றும் கூறினான். அலத்தற் காலை - துன்பக் காலம்: ஈண்டு வறுமை மேற்று.
192-206. மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி -
கலக்க முறுவேன் முன்னே ஒரு பெரிய தெய்வம் வெளிப்பட்டு, உயங்காதொழி நின்
உயர் தவத்தால் ஓர் காரிகை தோன்றும் - வருந்தற்க எனத் தேற்றி நினது பெருந்
தவத்தினாலே ஈண்டு ஒரு மங்கை வருவாள் என்று சொல்லி, அவள் பெரும் கடிஞையின்
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்-அவள் கையிற் கொண்ட பெருமை பொருந்திய
பாத்திரத்தின் கண்ணுள்ள நிறைந்த உயிர்களின் பசிப்பிணிக்கு மருந்தாகிய
உணவினால் பெரிய நிலத்து மக்கள் உய்தி பெறுவர், ஆங்கவள் அருளால் அமரர்கோன்
ஏவலில் தாங்கா மாரியும் தான் நனி பொழியும் - அவளது அருளினாலே இந்திரன்
ஏவல்பெற்று முகில்கள் மிக்க மழையை மிகவும் பொழியும், அன்னாள் இந்த அகனகர்
புகுந்த பின்னாள் நிகழும் பேரறம் பலவால் - அந்நங்கை இந்தப் பெரிய நகரத்திற்
புகுந்த பின்பு ஈண்டு நிகழும் பெரிய அறங்கள் பலவாகும், கார் வறம் கூரினும்
நீர்வறங் கூராது - மழை பெய்யாது ஒழியினும் நீர் வறுமை யுண்டாகாது, பண்டையோர்
இழைத்த - முன்னோரால் அமைக்கப் பெற்ற, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு
மாமணிபல்லவம் வந்தது ஈங்கென - கொழுவிய நீரினையுடைய கோமுகி என்னும் பொய்கையுடன்
பெரிய மணிபல்லவமே ஈண்டு வந்திருக்கின்றது என்னுமாறு, பொய்கையும் பொழிலும்
பாரகம் விதியிற் புனைமின் என்று அறைந்து அத் தெய்வம் போயபின் - வாலியுஞ்
சோலையும் இந்நிலத்தே முறைப்படி உண்டாக்கி அழகு படுத்துவீராக என்று கூறி அத்தெய்வம்
சென்ற பின்னர்; செய்து யாம் அமைத்தது இவ்விடம் என்றே அவ்விடங் காட்ட
- யாங்கள் செய்தமைத்த இடம் இதுவாகும் என்று கூறி அவ்விடத்தை மணி மேகலைக்குக்
காட்ட; |