பக்கம் எண் :

பக்கம் எண் :492

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை

தன் மகள் - நாக நாட்டையாளும் அரசனுடைய மகளாகிய, பீலி வளை - பீலிவளை யென்பவள், தீவகம் பொருந்தி-தான் மணிபல்லவத் தீவிலிருந்துகொண்டு, வென்வேற்கிள்ளிக்கு - சோழன் நெடு முடிக்கிள்ளி யென்பானுக்கு, தான் பயந்த புனிற்றிளங் குழவியை- தான் பெற்ற ஈன்றணிமை தீராத இளங்குழந்தையை, தனிக்கலக் கம்பலச் செட்டி கைத்தரலும்-தனியே கலஞ் செலுத்திப் போந்த கம்பலச் செட்டிபால் கையடைப்படுத்துச் சோழன்பாற் சேர்க்க என விடுத்தாளாக, வணங்கிக்கொண்டவன் - அவளை வணங்கி அக் குழவியை ஏற்றுச் செல்லும் அச் செட்டி, வங்கமேற்றிக் கொணர்ந்திடும் அந்நாள்-தன் தனிக்கலத்தில் கொண்டுவந்த அக்காலத்தில், அடைகரைக்கு அணித்தா-சோழமண்டலக் கரைக்கு அண்மையில், வரும்போது, கூர் இருள் யாமத்து - மிக்க இருள்சூழ்ந்த நடுவியாமத்தே, அம்பி கெடுதலும் - மரக்கலம் சிதைந்து கெட்டதாக, மரக்கலம் கெடுத்தோன்-கலம்கெட்டுத் தான்மட்டில் தனியே தப்பிக் கரையை யடைந்த அச் செட்டி, மைந்தனைக் காணாது அரைசற்குஉணர்த்தலும்-அரசன் மகனைத்தேடியும்காணாமல் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தலும், அவன் அயர்வுற்று-அரசன் மனம் வருந்தி, விரைவனன் தேடி-விரைந்து சென்று தேடித் திரிந்ததனால், விழாக்கோள் மறப்ப - காவிரிப்பூம்பட்டினத்தில் எடுத்தற்குரிய இந்திரவிழா மறக்கப்பட்டதாக, தன் விழாத் தவிர்தலின்- தனக்குரிய விழாச் செய்யப்படாது கழிதலால், வானவர் தலைவன்-(சினமுற்ற) வானவர்க்கிறைவனான இந்திரன் எ-று.

 நாக நாட்டு வேந்தனை, "நாக நாடு நடுக்கின் றாள்பவன், வாகை வேலான் வளைவணன்" (மணி. 24:54-5) என்றமையின் ஈண்டுவாளாது "நாக நாடாள்வோன்" என்றொழிந்தார். ஈன்றணிமை தீருமுன்னே தான் பெற்ற குழவியை விடுத்தமையின், "புனிற்றிளங் குழவி" யென்றார். நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளை மணிபல்லவம் போந்து புத்த பீடிகையை வலஞ் செய்து வணங்க வந்திருந்த காலத்தே ஆங்குப் போந்த கம்பலச்செட்டிபால் தன் குழவியைக்கையடைப்படுத்துத் தான் அம் மணிபல்லவத்தே தவிர்ந்தமையின், "தீவகம் பொருந்தி" யென்றும், அச் செட்டியும் தனியே கலஞ் செலுத்தி வந்தமை தோன்ற, "தனிக் கலக் கம்பலச் செட்டி"யென்றும், தன்பாற் கையடைப்படுத்துவது அரசிளங் குழவியாதலாலும், கையடைப்படுத்துபவள் அரசன் மனைவியாதலாலும் "வணங்கி"யென்றும் கூறினார். முன்பும், "தொழுதனன் வாங்கி" (25: 189) என்பது காண்க; அரசிளங் குளவி உயிருய்தலின், "அடைகரை யணித்தா" என்றும், அதனைச் செட்டி காணா தல மருதற் கேது கலஞ்சிதை காலமாதலின், "கூரிருள் யாமத்"தென்றும் குறித்தார். தன் குழவியை யிழந்த கொடுந் துயரம் சோழன் உள்ளத்தைக் கவர்ந்து வருத்துதலின், விழாவைப்பற்றிய நினைவு மறைவதாயிற் றென்றற்கு, "அயர்வுற்" றென்றும், விரைவனன் தேடி விழாக்கோள்