பக்கம் எண் :

பக்கம் எண் :493

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
 
மறப்ப" என்றும் தெரித்துரைத்தார். இதனாற் பயன், குழவியின் மறைவுகுறித்து அரசன் உள்ளத்துத் தோன்றிய அயர்ச்சி, காவிரிப்பூம்பட்டினம் கெடுதற் கேதுவாயிற் றென்பதாம்.

14--8. நின் உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த - உனக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனது நெடியகுலத்திற் பிறந்த, மன்னுயிர்முதல்வன்-மிக்க உயிர்கட்கெல்லாம் அருள்செய்யும் முன்னோனொருவன், மகர வேலையுள் முன்னிய வங்கம்-மகரமீன் வாழும் கடலில் தான் செலுத்திச் சென்ற மரக்கலம், பசுங் கம்பளத்து பொன்னின் ஊசி துன்னிய தென்ன - பசுமையான கம்பளத்தில் இரும்பாற் செய்த ஊசியொன்று எளிதிற்றைத்து இடந் தெரியாது மறைந்தாற்போல, முங்கிக் கேடுற - மூழ்கிக் கெட்டதாக, தொடு கடல் உழந்துழி-ஆழ்ந்த கடற்கண்ணே வருந்தினகாலத்து எ-று.

கப்பளத்து ஊசி துன்னியதென்ன, கடலிடத்தே வங்கம் கேடுற என இயைக்க. கோவலன் பெயர் கேட்ட மாத்திரையே உள்ளம் உருகும் பான்மையளாதலின், "நின்னுயிர்த் தந்தை" யென்றும், அவன் குலத்து முன்னோன் எவ்வுயிர்க்கும் அருள் மேவிய அறவோனாதலின் "மன்னுயிர் முதல்வன்" என்றும் சிறப்பித்தார். பிறாண்டும் அவனை, "ஆதி முதல்வன் போதி மூலத்து, நாதனாவோன்" (29:23-4) என்பர். இரும்பைக் கரும்பொன்னென வழங்கும் வழக்குப்பற்றி, "பொன்" னென்றார். பசுங் கம்பளங் கருங் கடற்கும், பொன்னினூசி வங்கத்துக்கும் உவமை. கடலலையால் உதைப்புண்டு ஏழுநாள்காறும் மிதந்து வருந்தினமையின், "தொடுகடல் உழந்துழி" என்பாராயினர்.

  ஏழு நாள் எல்லை-இவ்வாறு ஏழுநாள்காறும் வருந்தி, இடுக்கண் வந்து எய்தா-உயிரிழக்குந் துன்பம் வந்து நெருங்கிய எல்லையில், சீலம் வாய்மையின் வழுவாக் கொண்ட பான்மையின்-ஐவகைச் சீலமும் நால்வகை வாய்மையும் குற்றமற மேற்கொண்டொழுகும் இயல்பின னாதலால், தனாது பாண்டு கம்பளம்-இந்திரன் தான் வீற்றிருக்கும் பாண்டு கம்பளமிட்ட இருக்கை, நடுக்குற்ற தன்மை நோக்கி - அசையத் தொடங்கிய வமைதி கண்டு, போதி மூலத்து ஆதிமுதல்வன் நாதனாவோன்-இவ்வணிகன் போதியின் அடியிலிருந்து நோற்ற ஆதி முதல்வனும் நாதனுமாகிய போதி சத்துவனாகும் தகுதியுடையவனாவான், நளி நீர்ப்பரப்பின்-பெரிய கடற் பரப்பிலே, எவ்வமுற்றான் தனது எவ்வம்தீர் என - துன்ப முற்ற இவனது துன்பத்தைப் போக்குவாயாக என ஆங்கிருந்த மணிமேகலா தெய்வத்தைப் பணிக்கவும், அறவரசாளவும்-உலகில் அறம்புரியும் வேந்தரே அரசாளவும், அறவாழிஉருட்டவும்-அவரது அறவாணையே நிலவவும், பிறவிதோறு உதவும் பெற்றியன் - எடுத்த பிறப்புத்தோறும் அவர்கட்குஉதவிபுரியும் தன்மையுடையவளாகிய அவள், பவ்வத்து எடுத்து - கடலினின்றும் அவனை யெடுத்து,