சத்தம்
நித்தம், அமூர்த்தமாகலின் என்று கூறும் வாதி பக்கத்துக்கு விபக்க வியாத்தி
வசனம் "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமன்று" என்பதாகலின்,
அதனை யெடுத்தோதினார். இதற்கு விபக்கவாதி காட்டும் திட்டாந்தம் இதவென்பார்,
"ஆகாசம்போல்" என்றார். எனவே, ஆகாசம் நித்த மன்மையும் அமூர்த்த மன்மையுமாகிய
இரண்டு தன்மங்களையுமுடைய தென்பது பெறப்படும். சத்தம் நித்தமென்ற வாதி,
ஆகாசம் உள்பொருளென்று கொள்ளும் கொள்கையுடையனாயின, அதன்பால் நித்தத்துவமும்
அமூர்த்தத்துவமும் என்ற தன்மங்களுண்டென்ப தெய்துதலின், "ஆகாசம் பொருளென்பாற்
காகாசம் நித்தமும் அமூர்த்தமுமாதலால்" என்றும், இவ்விரண்டும் சாத்திய
சாதனங்களின் தன்ம மன்மையின், "சாத்திய நித்தமும் சாதனமாவுள்ள வமூர்த்தமும்
இரண்டும் மீண்டில" என்றும் கூறினார். ஈண்டு, ஆகாசம் உள்ளதொரு பொருளாகக்கொண்டு
கூறுதலின், இஃது உண்மையின் உபயாவியா விருத்தியாயிற்று.