சாத்திய தன்மமில்லாவிடத்துச்
சாதன தன்மம் இல்லாமைசொல்வது வெதிரேக வியாத்தி வசனமாகும். வெதிரேகம்-எதிர்மறை.
இதனையே முன்னர் விபக்கத் தொடர்ச்சி மீட்சி யென்றார். வைதன்மிய திட்டாந்தங்
காட்டுமிடத்து, இதனை எடுத்து விளங்கவுரைத்த பின்பே காட்ட வேண்டுமாதலின்,
உரையாது காட்டுவது வெதிரேக விலக்கணத்துக்குக் குற்றமாதலின், "அவ் வெதிரேகம்"
என்றும், அஃதாவது, "சாத்தியமில்லாவிடத்துச் சாதனமின்மை சொல்லாது விடுதலாகு"
மென்றும் கூறினார். இதனை விளக்குவார், "சத்தம் நித்தம் பண்ணப் படாமையால்"
என முதற்கண் பக்க வசனமும் ஏதுவும்கூறி, இதற்கு, கூறற்பாலதாகிய விபக்கதந் தொடர்ச்சி
மீட்சி மொழியாகும் வெதிரேக வியாத்திவசனம் இது வென்பார், "யாதொன்று நித்தமன்று
பண்ணப் படுவதல்லாததுவுமன்று எனும் இவ் வெதிரேகம்" என்றும், இதனை முன்பே கூறாது,
வாளா குடத்தைத் திட்டாந்தமாகக் காட்டல் அவ் வெதிரேக மென்னும் குற்றமாமென்றற்கு,
"குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமுங் கண்டேமாதலால் என்னின் வெதிரேகம்
தெரியாது" என்றும் கூறினார்.
இனி,
நியாயப் பிரவேசமுடையார் சாத்திய சாதன தன்மங்களின் இல்லாமையை யுணர்த்தும்
வெதிரேக வியாத்திவசனம் காட்டாமலே விபத்துக்குரிய திட்டாந்தத்தைக் காட்டுவது
அவ் வெதிரேகத் திட்டாந்தாபாசம் என்று இலக்கணமும் குடத்தின்கண் மூர்த்தமன்மையும்
அநித்தத்தன்மையும் காணப்பட்டனவெனத் திட்டாந்தமும் காட்டுவர். பிரசத்தபாதர்
இதனை அவியாவிருத்த நிதரிசனாபாசம் என்று பெயர் கூறி, கடம்போல என இவ்வாறே
உதாரணங் காட்டுகின்றார்.
460--8.
விபரீத வெதிரேகமாவது
- விபரீத வெதிரேகமென்னும் திட்டாந்தப் போலியாவது; பிரிவைத் தலை தடுமாறாச்
சொல்லுதல்- விபக்கத்து வெதிரேக வியாத்தி வசனத்தைத் தலைதடுமாறச் சொல்லுவதாம்
; சத்தம் நித்தம் மூர்த்தமாதலின் என்றால் சத்தம் நித்தமாம் மூர்த்தமாகையால்
என்று சாத்திய சாதன வசனமான பக்கத்தைக் கூறினால்; என்று நின்றவிடத்து என்று
இவ்வாறுநின்றதற்கு விபக்க வெதிரேக வியாத்தி கூறுமிடத்து; யாதோரிடத்து நித்தமுமில்லை
அவ்விடத்து மூர்த்தமுமில்லை யெனாது - யாதொரு பொருளிடத்து நித்தத்துவ மில்லையோ
அப் பொருளிடத்து மூர்த்தத்துவமும் இல்லையாம் என்று சொல்லாமல் ; யாதோரிடத்து
மூர்த்தமும் இல்லை அவ்விடத்து நித்தமும் இல்லை யென்றால் - யாதோர் பொருளிடத்து
மூர்த்தத்துவமில்லையோ அப் பொருளிடத்தே நித்தத்துவமுமில்லையெனத் தடுமாறிச்
சொன்னால்; வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க-வெதிரேக திட்டாந்தம்
மாறுபட்டுக் குற்றமாமெனக் கொள்வாயாக எ - று.