தானந் தாங்கிச் சீலந் தலைநின்று
போன பிறப்பிற் புகுந்ததை யணர்ந்தோள்
புத்த தன்ம சங்க மென்னும்
முத்திற மணியை மும்மையின் வணங்கிச்
சரணா கதியாய்ச் சரண்சென் றடைந்தபின
முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன்
அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து
முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத்
துடித லோக மொழியத் தோன்றிப்
போதி மூலம் பொருந்தி யிருந்து
மாரனை வென்று வீர னாகிக்
குற்ற மூன்று முற்ற வறுக்கும்
வாமன் வாய்மை யேமக் கட்டுரை
இறந்த காலத் தெண்ணில்புத் தர்களுஞ்
சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது
ஈரறு பொருளி னீந்தநெறி யுடைத்தாய்ச்
சார்பிற் றோன்றித் தத்தமின் மீட்டும்
இலக்கணத் தொடர்தலின்
மண்டில வகையா யறியக் காட்டி
எதிர்மறை யோப்ப மீட்சியு மாகி
ஈங்கி தில்லா வழியில் லாகி
ஈங்கி துள்ள வழியுண் டாகலில்
தக்க தக்க சார்பிற் றோற்றமெனச்
சொற்றகப் பட்டு மிலக்கணத் தொடர்பாற்
கருதப் பட்டுங் கண்டநான் குடைத்தாய்
மருவிய சந்தி வகைமூன் றுடைத்தாய்த்
தோற்றம் பார்க்கின் மூன்று வகையாய்த்
தோற்றற் கேற்ற காலமூன் றுடைத்தாய்க்
குற்றமும் வினையும் பயனும் விளைந்து
நிலையில வறிய துன்பமென நோக்க