துன்பந் தோற்றம் பற்றே காரணம்
இன்பம் வீடே பற்றிலி காரணம்
ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ
உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை
உள்ள வறிவிவை யைங்கந்த மாவன
அறுவகை வழக்கு மறுவின்று கிளப்பிற்
றொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை
இயைந் துரை யென்ற நான்கினு மியைந்த
உண்மை வழக்கு மின்மை வழக்கும்
உள்ளது சார்ந்த வுண்மை வழக்கும்
இல்லது சார்ந்த வின்மை வழக்கும்
உள்ளது சார்ந்த வின்மை வழக்கும்
இல்லது சார்ந்த வுண்மை வழக்குமெனச்
சொல்லிய தொகைத்திற முடம்புநீர் நாடு
தொடர்ச்சி வித்து முளைதா ளென்றிந்
நிகழ்ச்சியி லவற்றை நெல்லென வழங்குதல்
இயல்பு மிகுத்துரை யீறுடைத் தென்றுந்
தோன்றிற் றென்று மூத்த தென்றும்
மூன்றி னொன்றி னியல்புமிகுத் துரைத்தல்