பக்கம் எண் :

பக்கம் எண் :562

Manimegalai-Book Content
30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை
 

லில்லாதவளாய், சரண் சென்று அடைந்த பின்-புத்த சங்கத்தே அடைக்கலமாகப் புகுந்த பின்னர் எ - று.

சீலந் தாங்கித் தானம் மேற்கொண்டது ஏதுவாகப் போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் என்றுமாம். பின்பும், "சீலந்தாங்கித் தானம் தலைநின்று" (30: 78) என்பர். எனவே தானமும் சீலமும் ஒப்ப வேண்டுவன வென்பது துணிபாம். பாரமிதை பத்தனுள் முதலாவதாகிய இது தானபாரமிதை யெனவும் வழங்கும்; சீலம் சீல பாரமிதை யெனப்படும். பண்டைநாளிற் பாரமிதை ஆறாகவும் பிற்காலத்தே பத்தாகவும் வகுக்கப்பட்டன. பழைய பாரமிதை ஆறாவன; தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், பிரஞ்ஞை என்னவாம்; பின் சேர்க்கப் பட்டவை உபாயம், துணிவு, வலி, ஞானம் என்ற நான்குமாம். இவற்றுள் முதலிற் கூறிய தானமும் சீலமும் உலகியல் வாழ்விலிருப்போர் தொடக்கத்தே மேற்கொள்ளற்பாலன வென்றும், இவற்றினால் விளைவும் பயன், மறுமையில் இன்பப் பிறப்பெய்துவதென்றும் திக்க நிகாயம் (1: 110-2) கூறுகிறது. இத் தானத்தைப் போதி சத்துவபூமி யென்னும் நூலாசிரியர் ஒன்பது வகையாகக் கூறுவர்; அவை சுபாவதானம், சருவ தானம், துட்கர தானம், சருவதோமுக தானம், சற்புருட தானம், சருவகார தானம், விகதார்த்திக தானம், இகமுத்திர சுக தானம், விசுத்த தானமென்பனவாம். மன மொழி மெய்களை யடக்கி யறநெறிக்கட் செலுமத்துவதே சீலமென்றும், அது சம்வரசீலம், குசலதரும சங்கிராஹக சீலம், சத்துவகிரியா சீலம் என மூவகைப்படுமென்றும் தருமசங்கிரக மென்னும் பௌத்த நூல் கூறுகிறது. இனி, இச் சீலத்தைச் சப்த சீல மென்று ஒரு சாராரும், பஞ்சசீல மென்றொரு சாராரும் பகுத்து முடிவில் தசசீலமாகக் கொண்டனரென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தொடகக்முதல் தசசீலமென்ற பாகுபாடு தோன்றியதுவரை இச்சீலம். மூன்றும், ஐந்தும், ஏழுமாகப் பெருகிவந்து முடிவிற்றான் பத்தாயிற்று என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. பஞ்சசீலமென்பன உபாசகருக் குரிய வென்று விநயபிடகம்1 கூறுகிறது. கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, புறங்கூறாமை, வன்சொலியம்பாமை, பயனில மொழியாமை, வெஃகாமை, வெகுளாமை. நற்காட்சியென்ற பத்தும் தசசீலமாம். நற்காட்சியை "மித்யாத்ருஷ்டி வ்ரத்தி" என்றுகூறுப. புத்தனாந் தன்மையும் புத்த தருமமும் புத்த சங்கமும் மூன்று மணிகளாக உருவகஞ் செய்து 2இரத்தினத்திரயமென்ப வாதலின், இவரும் ''முத்திற மணி" யென்றார். புத்தம் சரணங் கச்சாமி, தருமம்சரணங் கச்சாமி, சங்கம் சரணங் கச்சாமி என்று மூன்றையும் மும்முறைசொல்லி வழிபடுவது பற்றி, "மும்மையின் வணங்கி" யென்றாரென்றுமாம். புத்த தருமத்தை மேற்கொள்வோர் தொடக்கத்தே இம்மூன்றையும் சரண்புகுதல் வேண்டுமென அவதான சதகம் கூறுகிறது; அவ்வாறே மணிமேகலையும்.


1. 83.    2.  அவதான சதகம் (1: 301-4).