பக்கம் எண் :

பக்கம் எண் :38

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
  உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் - உய்யானத்தின்கண் அறிந்தோர் செல்லமாட்டார்கள்;
 
வானவர் விழைதலன்றி மண்ணவர் விழையார் என்க. வானவர் விரும்புதலால் வண்டு இமிராவாயின ; 1"சுரம்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்" என்பது காண்க. வாடாத மலர் மாலைகள் தேவர்களால் நிருமிக்கப்பட்டன. மாலைகள் தூக்கலின் பூதங் காக்குமென்று கருதுவாராவர். உய்யானம் - உத்தியானம் ; அரசர் விளையாடுஞ்சோலை.

53-58. வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-ஞாயிற்றின் கதிர் வெப்பத்தால் விரிந்த சிறகினை இழந்த, சம்பாதி இருந்த சம்பாதி வனமும்-சம்பாதி என்பவன் இருந்த சம்பாதி வனமும், தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை - அழியாத நீர்ப்பெருக் கினையுடைய காவிரி நங்கையின் தந்தையாகிய, கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் - கவேரன் எனபவன் இருந்த
கவேர வனமும், மூப்புடை முதுமைய தாக்கணங்கு உடைய - மிக்க முதுமையுடையனவாகிய தீண்டி வருத்தும்பெண் தெய்வங்களை உடையனவாதலின், யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார் - அறிவுடையோர் அவற்றை உறதியுடையவாகக் கருதி அவற்றின்கட் செல்லார் ;

சம்பாதி - கழுகரசன் ; சடாயுவினுடன் பிறந்தவன் ; இவன் வானிலே பறந்து ஞாயிற்று மண்டிலத்தின் அணிமையிற் சென்றகாலை ஞாயிற்றின் வெம்மையாற் சிறை தீயப்பெற்றனன் என்பர். சம்பாதி, சடாயு என்னும் இருவரும் இறைவனைப் பூசித்த இடம் திருப்புள் ளிருக்குவேளூர் என்னும் பதியாகும் ; 2"தள்ளாய சம்பாதி சடாயென் பார் தாமிருவர், புள்ளானார்க் கரையரிடம் புள்ளிருக்கு வேளூரே," என்பது காண்க. புகார் நகரம் அப்பதிக்கு அணித்தாகலின் சம்பாதி ஆண்டு வந்திருத்தல் இயல்பேயாகும். வேத்து முனியாகிய கவேரன் என்பவன் பிரமனைக் குறித்து அருந்தவம் புரிந்து அவனருளால் விட்டுணு மாயையைப் புதல்வியாகப் பெற்று முத்தி யெய்தினனென்றும், பின்பு அக்கன்னி பிரமன் கட்டளையால் நதி வடிவுற்றமையால் அந்நதி காவேரியெனப் பெயர் பெற்றதென்றும் புராணங் கூறுமென்பர். யாப்புடைத்தாக-இழுக்கில்லனவாக ; யாப்புடைத்தாக அணங்குடைய என்றியைத்தலுமாம்.

59-62. அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் - கருணையும் நேயமும் ஆருயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பெரிய மேற்கோளும் நீங்காத நோன் பினையுடைய, பகவனது ஆணையின் பல்மரம்பூக்கும் உவவனம் என்பது ஒன்று உண்டு - புத்த தேவனது ஆணையால் பல மரங்களும் இடையறாது பூக்கின்ற உவவனம் என்னும் பெயருள்ள சோலை ஒன்றுண்டு ;

1 முருகு. 43.   2 சம்பந்தர் தேவாரம், 2 : 1.