பக்கம் எண் :

பக்கம் எண் :40

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை
 
  உறும் எனும்-மனத்தொடு கூடாத வழியும் செய்தவினை பின்வந்து பயன்றரும் என்கின்ற, வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் -வலியினையுடைய நோன்பிகள் வருத்தங் கொள்ளவும், செய்வினை சிந்தை இன்றெனில் யாவதும் எய்தாது எனபோர்க்கு ஏதுவாகவும்- மனத்தொடு கூடாவிடின் செய்த வினை சிறிதும் வந்து பயனளியாது என்போர்க்குக் கருவியாகவும், பயம்கெழு மா மலர் இட்டுக் காட்ட மயன் பண்டு இழைத்த மரபினது அதுதான் - மலர்களை இட்டுக் காட்டுமாறு மயன் என்போனால் முன்னர்ச் செய்யப்பட்ட பயன் சிறந்த முறைமையை யுடையதாகும் அத்தாமரைப் பீடம் ;

பயங்கெழு மரபினது எனக் கூட்டுக. மனத்தொடு கூடாவழி வினை பயன்றரா தென்பதனை, 1"இன்னா வெனத்தா ணுணரந்தவை துன்னாமை வேண்டும்" 2"மனத்தானாம் மாணா செய்யாமை தலை" என்னுந் திருக்குறள்களானும், அவற்றிற்கு முறையே, "அறமும் பாவமும் உளவாவது மனமுளனாய வழியாகலான் "உணர்ந்தவை என்றார்" எனவும், "ஈண்டு மனத்தா னாகாத வழிப் பாவமில்லை யென்பது பெற்றாம்" எனவும் பரிமேலழகர் கூறிய உரையானும் அறிக.

80-85 அவ்வனம் அல்லது-அச்சோலையின்கணல்லது, அணியிழை- மாதவியே, நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்- நின்மகள் வேறாகச் செல்லும் தகுதியில்லாதவள்; மணிமேகலை யொடு மாமலர் கொய்ய - மணிமேகலையுடன் மலர் கொய்யுமாறு, அணியிழை நல்லாய் யானும் போவல் என்று-அழகிய அணிகலனையுடைய மாதவி யானும் செல்வேன் என்று, அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி - அழகிய பூங்கொம்பனைய மணிமேகலையுடன் சேர்ந்து, மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ - மணிகளுடன் கூடிய தேர்கள் செல்லும் வீதியின்கண் சுதமதி செல்லும்பொழுது;

செவ்வனம் - வேறாக; "3திருமக யிருக்கை செவ்வனங் கழிந்து" என்பழி, செவ்வனம் கழிந்து எனபதற்கு, வேறாகக் கழிந்து என்று அடியார்க்கு நல்லார் பொருளுரைத்துள்ளமை காண்க ; நேராக என்றுமாம். செம்மை - ஈண்டுத் தகுதி.

86-103. சிமிலிக் கரண்டையன்-உறியிலே வைத்த குண்டிகையை யுடையவனும், நுழைகோல் பிரம்பினன்-நுண்ணிதாய்த் திரண்ட பிரம்பினை யுடையவனும், தவலரும் சிறப்பின் அராந்தாணத்து உளோன்-கேடில்லாத மேன்மையையுடைய அருகன்கோட்டத்தே யுள்ளவனும், நாணமும் உடையும் நன்கனம் நீத்து - நாணத்தையும் ஆடையையும் அறவே அகற்றி, காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி-
 
1 2 திருக்குறள் 3167.   3 சிலப். 6 : 127.