பக்கம் எண் :

பக்கம் எண் :46

Manimegalai-Book Content
3. மலர்வனம் புக்க காதை

  பேடியைக் காணுமாறு சூழ்ந்த முழக்கத்தினை யுடைய மக்களைப் போல, மணிமேகலைதனை வந்து புறம் சுற்றி-வந்து மணி மேகலையைச் சுற்றிலும் சூழ்ந்து, அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் - எழிலமைந்த நல்லுருவத்தினை அரிய தவநெறியிற் படுத்திய தாயோ கொடியவளும் தகுதியில்லாதவளுமாவள் ;

பாண்டவர் ஐவரும் பாஞ்சாலியும் விராடனது நகரத்திற் கரந்துறைந்தகாலை அருச்சுனன் பேடியுருக் கொண்டு பிருகந்தளை என்னும் பெயருடன் ஆண்டிருந்தமை பாரதத்தால் அறியலாவது. கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு முழங்கித் திரியுமவர். அணி அமை தோற்றத்து - அணிகள் இல்லாத தோற்றத்துடன் என்றுமாம். சீவக சிந்தாமணியில் 1"உப்பமை காமத்துப்பின்" "நிகரமைந்த முழந்தாளும்" என்னுமிடங்களில் ''அமை'' எனபதற்கு இப்பொருள் கூறப்படுதல் காண்க.

150-158. ஈங்கிவள் மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகில் - இம் மணிமேகலை சிறந்த மலர் கொய்தற்குப் பூம்பொழிலில் நுழைந்தால், நல் இள அன்னம் நாணாது ஆங்குள வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை-அங்கோயுள்ள நல்ல இளைய அன்னப் புறவைகள் நாணாமல் இவள் நடைபோல் நடக்க வல்லனவோ, மாமயில் ஆங்குள வந்து முன்நிற்பன சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன் - ஆண்டுள்ள அழகிய மயில்கள் இந்நங்கையின் எதிரே வந்து நிற்பனவாகி இவளுடன் சாயலைக் கற்பனவாகுமோ, பைங்கிளி தாம் உள பாவைதன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ - அங்கிருக்கும் பசிய கிளிகள் இம்மங்கையின் மொழிகட்குத் தோற்பன வல்லவோ, இசையுந அல்ல - இவை யாவும் ஒப்பனவல்ல, என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக-என்று இவைகளைக் கூறி அனைவரும் வருந்திக் கெட,

ஆங்குள அன்னம் நாணாது வல்லுந கொல்லோ எனவும், ஆங்கள மாமயில் வந்து முன்னிற்பனவாய்க் கற்பனகொலோ எனவும் இயையும். மயில்கள் கற்றற்குத்ததானும் முன்வந்து நிற்கமாட்டா என்றபடி. சாயல் - மென்னை. எஞ்சுதல் - குறைதல் ; தோற்றல்.

159. செந்தளிர்ச் சேவடிநிலம் வடு உறாமல் - சிவந்த தளிர்போலும் சிவந்த அடகளால் நிலத்திலே வடுவுண்டாகாமற் சென்று ;

வடு - சுவடு அடியும் நிலமும் வடுவுறாமல் என்றுமாம். சென்று என ஒரு சொல் வருவிக்க.

160-171. குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் - குராவும் வெண்கடம்பும் குருந்தும் கொன்றையும், திலகமும் வகுளமும்


1 சீவக. 107 ; 175.