பக்கம் எண் :

பக்கம் எண் :48

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 

[உவவனத்திலும், அதன்கண் உள்ள பொய்கையிலும் நிகழும் இயற்கைக் காட்சிகளைச் சுதமதி காட்ட மணிமேகலை காண்பாளாயினாள். அவள் ஆங்கு அவ்வாறிருக்க, மதவெறியால் வீதிதோறும் கலக்குறுத்துத் திரிந்த காலவேகமென்னும் யானையின் மதத்தை யடக்கித் தேரிலேறித் தானை சூழ வரும் உதயகுமரன் கணிகையர் தெருவில் ஒரு மாடத்தில் மலரணைமேற் காதற்பரத்தை யொருத்தியுடன் மகர யாழின் கோட்டினைத் தழுவிக் கொண்டு மயங்கிப் பாவைபோல் அசைவற்றிருந்த எட்டிகுமரனைச் சாளர வழியாற் கண்டு, ''நீ இங்ஙனம் மயங்கியிருக்கும் காரணம் யாது,'' என்று வினவினன். அது கேட்டலும் அவன் விரைந்தெழுந்து அருகணைந்து தொழுது, ''வாடிய அழகுடன் இவ்வீதி வழியே மலர்வனத்திற்குச் செல்லும் மணிமேகலையைக் கண்டேன்; காண்டலும், அவள் தந்தையுற்ற கொடுந்துயர் என் நினைவிலே தோன்றி என் மனவுறுதியை மாற்றி, இவ்வியாழின் பகை நரம்பில் என் கையைச் செலுத்தியது; இதுவே யானுற்ற துன்பம்,'' என்றனன். என்றலும் பல நாளாக மணிமேகலையை விரும்பியிருந்த உதயகுமரன் மகிழ்ச்சியுற்று, ''அவளை என் தேர்மீதேற்றிக்கொண்டு வருவேன்,'' என்று அவனுக்குக் கூறிவிட்டுத் தேருடன் சென்று உவவனத்தின் மதில்வாயிலை அடைந்தான்.

மணிமேகலை அத்தேரொலியைக் கேட்டுச் சுதமதியை நோக்கி, ''உதயகுமரன் என்பால் மிக்க விருப்ப முடையனென்று முன்பு மாதவிக்கு வயந்தமாலை கூறியதைக் கேட்டுளேன்; இஃது அவன் தேரொலி போலும்; இதற்கியாது செய்வேன்,'' என்றாள். அதைக்கேட்ட சுதமதி அவளை ஆங்குள்ள பளிக்கறையிற் புகுத்தி, உள்ளே தாழிட்டுக்கொண்டு இருக்கச் செய்து, தான் அப் பளிக்கறைக்கு ஐந்து விற்கிடை தூரத்தே நின்றாள். அங்ஙனம் நின்றவளைத் தேரை நிறுத்திச் சோலையினூடே வந்த உதயகுமரன் கண்டு, ''நீ மணிமேகலையுடன் வந்தாய் என்பதனை அறிந்தேன்,'' என்று கூறி, மணிமேகலையைக் குறித்துத் தனது வேட்கை புலப்படப் பலவாறு வினாவினன். அப்பொழுது சுதமதி பொதியறைப்பட்டோர் போன்றுளம் வருந்தி, அவனை நோக்கி, "இளமை நாணி முதுமை யெய்தி, உரை முடிவு காட்டிய உரவோன் மருக,''னாகிய நினக்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் மகளிர் கூறுமாறும் உண்டோ? ஆயினும் ஒன்று கூறுவேன்; மக்கள் யாக்கை இவ்வியல்பினை உடையது; அதனைப் புறமறியாகப் பாராய்," என்று அதன் இழிவினை யெடுத்துரைத்தாள்; அவ்வுரை உதயகுமரன் செவியை அடையுமுன் பளிக்கறையி னுள்ளிருந்த மணிமேகலையின் உருவம் அவன் கண்ணெதிர்ப்பட்டது. (இக்காதையின் முதற்கண் உள்ள இயற்கைப் புனைவுகள் இன்பம் விளைப்பன. இறுதிக்கண் உடம்பின் இழி தகைமை நன்கு விளக்கப்பட்டுள்ளது.)]