பக்கம் எண் :

பக்கம் எண் :55

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை


28--34.
உருகெழுமீது ஊர் மீயான் நடுங்க - அச்சம் பொருந்திய மேலிடத்தின் ஊர்ந்திருக்கின்ற மாலுமி நடுங்க, நடுவுநின்று ஓங்கிய கூம்பு முதல் முறிய - நடுவில் நின்று ஓங்கிய பாய்மரம் அடியிலே முறிய, வீங்குபிணி அவிழ்ந்து கயிறு கால் பரிய - இறுகின பிணிப்பு அவிழ்ந்து பாய் கட்டின கயிறு அறுபட, வயிறு பாழ்பட்டாங்கு இதை சிதைந்து ஆர்ப்ப - அப்பொழுது நடுவிடம் பாழாகிப் பாய் பீறுண்டு ஒலிப்ப, திரைபொரு முந்நீர் இயங்கு திசை அறியாது - அலைகள் பொருகின்ற கடலின்கண் செல்லுந் திசை அறியாமல், யாங்கணும் ஓடி மயங்கு கால் எடுத்த வங்கம் போல - எவ்விடத்தும் ஓடி மயங்குகின்ற கடுங்காற்றினாலலைக்கப் பட்ட மரக்கலம் போல ;

மூதூர் என்னும் பாடத்திற்குப் புகாரின்கண் என்றுரைக்க,
மீயான் - மாலுமி ; நீயான் என்பதும் பாடம். நடுங்க முறியப் பரிய ஆர்ப்ப ஓடியென்க : ஓடி மயங்கு வங்கம் என்றியைக்க ; மயங்குகால் - சுழல் காற்று எனலுமாம் ; இதற்கு, சுழல் காற்றினால் எடுக்கப்பட்டு ஓடிய வங்கம்போல எனப்பிரித்துக் கூட்டுக.
35--44. காழோர் கையற - குத்துக்கோற்காரர் செயலற, மேலோர் இன்றி - பாகரும் இன்றி, பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்து - பாகனாற் குத்தப்பட்ட பிளவையினையுடைய பரிய முகத்தைக் கையாற்றுடைத்து, கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்து - அரசர் பெருந்தெருவையும் கொடி யணிந்த தேரோடும் வீதியையும் கடை வீதியையும் பெரிய கலக்க முண்டாக்கி, இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருபாற் படாது ஒருவழித் தங்காது-இருவகைப் பெயரினையுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதூரின் கண் ஒரு நெறிப்படாமல் ஓரிடத்திற் றங்காமல், பாகும் பறையும் பருந்தின் பந்தரும் - பாகனும் பறையடிப்போரும் பருந்தின் தொகுதியும், ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப - மிக்க வறுமை யுடையோரும் சுழன்று கூப்பிட, நீல மால்வரை நிலனொடு படர்ந் தெனக் காலவேகம் களிமயக்கு உற்றென - பெரிய நீல மலை நிலத்தின் கண் திரிவதுபோலக் காலவேகம் என்னும் பட்டத்தியானை மத மயக்குற்றுத் திரிந்ததாக ;

மேலோர் இன்றி-பாகரைவீசி யென்றபடி. பிளவை -அங்குசத்
தாற் பிளக்கப்பட்ட புண். பாகின் பிளவை-பாகனுடைய உடற் பிளவு என்றுமாம். இருவகைப் பெயரினை, 1"இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்" என்பதன் உரையா லறிக. பாகு - பாகன் பறை - பறையடிப் போர் ; யானைக்கு முன்பு பறையடிக்கப்படுதல் மரபென்பதனை, 2"நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப். பறையறைந் தல்லது


1 மணி. பதிகம். 32       2 கலி. 56.