பக்கம் எண் :

பக்கம் எண் :56

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை

செல்லற்க வென்னா, இறையே தவறுடை யான்" என்பதனாலறிக. ஆதுலமாக்கள் தெருவிலே திரிவராகலின் அவரையுங் கூறினார். பருந்தின் பந்தர் - உணவின்பொருட்டுப் பந்தரிட்டாற்போல் மேலே செல்லும் பருந்தினம், வரை நிலனொடு படரந்தென என்பது இல் பொருளுவமம். நிலனொடு - நிலமிசை. களி - மதம்.

  வங்கம்போலக் காழோர் கையறப் பாகன் முதலியோர்
 
அலவுற்று விளிப்ப மூதூரின்கண் மேலோரின்றித் துடைத்துப் பெருங் கலக்குறுத்துப் படாது தங்காது படர்ந்தெனக் காலவேகம் களிமயக்குற்ற என முடிக்க; வங்கம்போலக் காலவேகம் களிமயக்குற்றென என வியையும். இவ்வாறே மதுரைக்காஞ்சியில், 1"வீங்குபிணி நோன் கயிறரீஇயிதை புடையூக், கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன், கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ, நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல, இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து, கோலோர்க்கொன்று மேலோர் வீசி, மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக், கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்" என வந்திருந்தல் காண்க.
45--50. விடுபரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-செலுத்துகின்ற விரைந்த செலவினையுடைய குதிரையின்மீது கடிதிற்சென்று சேர்ந்து, கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி - தறுகண்மையுடைய யானையது மதத்தின் கூறுபாட்டினை அடக்கி, அணித்தேர்த் தானையொடு - அழகிய தேர் முதலிய படையுடன், அரசிளங் குமரன்-, மணித்தேர்க்கொடிஞ்சி கையால்பற்றி - தான் ஏறியுள்ள தேரின்கண் உள்ள அழகிய கொடிஞ்சியைக் கையாற் பிடித்துக்கொண்டு, கார்அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன் வருவோன் - தான் கார்காலத்து மலர்கின்ற கடப்பமாலையையுடைய முருகவேள் அல்லன் என்பதனைத்தான் அணிந்த ஆத்தி மாலையினால் அறிவித்து வருபவன்;

பரி - செலவு, உதயகுமரனாகிய அரசிளங்குமரன் எனக்
கூட்டுக.''கொடிஞ்சி-தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த்தட்டின் முன்னே நடுவது,'' என்பர் நச்சினார்க்கினியர். 2"கொடிஞ்சி நெடுந்தேர்," என்பதன் உரை காண்க. இது தாமரை மொட்டு வடிவமுள்ளதென்று கூறுவாருமுளர். இச் சொல்லினுருவம் கொடுஞ்சி யெனவும் காணப்படும். அழகு, இளமை, ஆண்மைகளால் இவனை முருகக்கடவுளென்றெண்ணி, கடப்ப மாலையின்மையானும் ஆத்திமாலை யுண்மையானும் இவன் முருகனல்லன், சோழன்மகன் என்று கண்டோர் துணிவரென உதயகுமரனின் அழகு முதலியன சிறப்பிக்கப்பட்டன வென்க. ஆர் - ஆத்தி.


1 மதுரைக். 376-83.       2 மதுரைக். 752.