பக்கம் எண் :

பக்கம் எண் :57

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 

51--8.
நாடக மடந்தையர் நலங்கெழு வீதி-நாடகக் கணிகையரது அழகு பொருந்திய வீதியில், ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் - ஆடகப்பொன்னாற் செய்தொழிலமைந்த மாளிகையின்கண், சாளரம் பொளித்த கால்போகு பெருவழி-காற்று செல்லுகின்ற பெரிய வழியாகிய துளைசெய்யப்பட்ட சாளரத்தினிடமாக, வீதி மருங்கு இயன்ற பூவணைப்பள்ளி - வீதியின் பக்கலில் இயற்றிய மலரணைச் சேக்கையில், தகரக்குழலாள் தன்னோடு மயங்கி - மயிர்ச்சாந்தினை யணிந்த குழலினையுடைய கணிகையொருத்தியுடன் மயக்கமுற்று, மகரயாழின் வான்கோடு தழீஇ - மகர யாழினது சிறந்த கோட்டைத் தழுவி, வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டிகுமரன் இருந்தோன் தன்னை - எழுது கோலினால் எழுதப்பட்ட ஓவியப் பாவை போல அசைவற்று இருந்த எட்டிகுமரனை,

ஆடகம்-நால்வகைப் பொன்னுள் ஒன்று.பொளித்த -
துளைசெய்த. கால்போகு பெருவழியாகிய பொளித்த சாளரம் என்க. மகரயாழ் - நால்வகை யாழினுளொன்று; பதினேழு நரம்புடையது என்பர். கோடு - யாழ்த்தண்டு. வட்டிகை - எழுதுகோல். எட்டி - வணிகர் பெறும் பட்டப் பெயர்; "எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண். டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன்." (22; 113-4) என்பர் பின்னும்; 1"எட்டி காவிதிப் பட்டந் தாங்கி," என்பதுங் காண்க; 2, ''எட்டி காவிதியென்பன தேய வழக்காகிய சிறப்புப் பெயர்" என்பர் நச்சினார்க்கினியர்.

59--64. மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் - மாதினோடும் மயக்கமுற் றிருப்போய் நீ அடைந்த துன்பம் யாது என வினவுதலும், ஆங்கதுகேட்டு வீங்கிள முலையொடு பாங்கிற்சென்று தான் தொழுது ஏத்தி-அதனைக் கேட்டு அக் காரிகையுடன் அவன் பக்கலிற் சென்று வணங்கித் துதித்து, மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் அவிழும் மலர்மாலையினை யுடைய அரச குமரனுக்கு, எட்டி குமரன் எய்தியது உரைப்போன் - தான் உற்ற துன்பத்தின் காரணத்தைக் கூறுகின்ற எட்டி குமரன்;

மயங்கினை: எச்சமுற்று. மயங்கி மாதர் தன்னொடும்
இருந்தோய் என்க. பாங்கில் - முறைமையால் என்றுமாம்.

65--71. வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் - திறப்பட அமைந்த செப்பின் உள்ளே வைக்கப்பட்ட நறுமலரைப்போல, தகை நலம் வாடி - மிக்க அழகு வாட்டமுற்று, மலர்வனம் புகூஉம் - பூம்பொழிலுக்குச் செல்லும், மாதவி பயந்த மணி

1 பெருங். 2. 3: 144.      2 தொல். தொகை. 12.