பக்கம் எண் :

பக்கம் எண் :59

Manimegalai-Book Content
4 பளிக்கறை புக்க காதை
 
  என்று சித்திராபதியினிடமாக அறிந்து, வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் - வயந்தமாலை மாதவிபால் ஒருநாள் கூறிய மொழியைக் கேட்டிருக்கின்றேனாகலின், ஆங்கவன் தேர்ஒலி போலும் ஆயிழை ஈங்கு என் செவிமுதல் இசைத்தது-சுதமதி அவ் வுதயகுமரனது தேரோசையே போலும் இப்பொழுது என் செவியிடம் ஒலித்தது, என் செய்கு என அமுதுறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும் - இதற்கு என் செய்வேன் என அமுதினுமினிய மொழியினையுடைய மணிமேகலை கூறுதலும்;

சித்திராபதியோடு உற்று எனக் கூட்டிச் சித்திராபதியால் அறிந்து
 
என்றுரைக்க; வயந்தமாலை சித்திராபதியுடன் அடைந்து என்றலுமாம். ஆயிழை: விளி.

89--90 சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் - சுதமதி அது கேட்டுத் தளர்ச்சியுற்ற மயிலைப்போல, பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று ஒளித்து அறை தாழ்கோத்து உள்ள கத்து இரீஇ-மணிமேகலையைப் பளிக்கறை மண்டபத்தின் உள்ளிடத்தே புகுக என்று கூறி ஒளித்து இருத்தி அறையின்தாழைக் கோத்து, ஆங்கது தனக்கு ஓர் ஐவிலின் கிடக்கை நீங்காது நின்ற நேரிழைதன்னை - அப்பளிக்கு மண்டபத்திற்கு ஐந்து விற்கிடை தூரத்தில் நீங்காமல் நின்ற சுதமதியை;

ஒளித்து அறை-ஒளியையுடையதாகிய அறையென்றுமாம். பணி
யாளர் ஐந்துவிற்கிடை தூரத்தே நிற்றல் மரபு; 1"ஐவிலினகல நின்றாங் கடிதொழு சிறைஞ்சினாற்கு," என்பது காண்க. நீங்காது நின்றனள்; அங்ஙனம் நின்ற நேரிழையை என அறுத்துரைத்து, நேரிழையைக் கண்டு என ஒரு சொல் விரித்துரைக்க.

91--6. கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி - ஒலியினையுடைய சேனையொடு விரைந்த செலவினையுடைய தேரையும் நிறுத்தி, பன்மலர்ப் பூம்பொயில் பகல் முளைத்ததுபோல்-பல மலர்களையுடைய பூஞ்சோலையில் ஞாயிறு தோன்றியதுபோல, பூமரச்சோலையும் புடையும் பொங்கரும் - பூம்பொழிலிலும் பக்கலிலும் கட்டுமலைகளிலும், தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசிளங்குமரன் - தாமரை மலர் போன்ற சிவந்த கண்களால் நோக்கிவருகின்ற மன்னிளம் புதல்வன், ஆரும் இல் ஒரு சிறை ஒரு தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் - யாருமில்லாத ஒரு பக்கத்தில் நீ ஒருத்தியாய் நிற்கின்றாய் நின் இயல்பினை அறிந்தேன் ;

பொங்கர் - ஈண்டுச் செய்குன்று. அரசிளங்குமரன் சுதமதியைக
கண்டு உன் திறம் அறிந்தேன் என்று கூறியென்க.

1 சீவக. 1704.