சில சொன்னால் அச் சொன் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத
இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்க ளுவக்கும்வகை நரை முடித்துவந்து,
முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறைசெய்தான்
கரிகாற்பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத்
தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாக முளவாம் என்றவாறு" என்னும் அதன்
உரையாலும் அறியப்படும்: பொருநராற் றுப்படையிலும் 1"முதியோ,
ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்" என இது கூறப்பட்டுளது. மருகற்கு முன்னிலையிற்
படர்க்கை.
111-25.
அனையது ஆயினும்
யான் ஒன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி - அங்ஙனமாயினும்
போரின்கண் விளங்குகின்ற தடந்தோள் வலியுடையாய் யான் ஒன்று கூறுவேன் அதனைக்
கேட்பாயாக, வினையின் வந்தது வினைக்கு விளைவாயது - கன்மத்தால் உண்டானது
கன்மத்திற்கு விளை நிலமாகவுள்ளது. புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது -
புனையப்படுவனவாகிய மணப்பொருள்கள் நீங்கப்படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்குக்
காட்டுவது, மூத்து விளிவுடையது - முதுமை யடைந்து சாதலையுடையது, தீப்பிணி இருக்கை-கொடிய
நோய்கட்கு இருப்பிடமாகவுள்ளது, பற்றின் பற்றிடம் - பற்றுக்களுக்குப் பற்றும்
இடமாயது, குற்றக்கொள்கலம் - குற்றங்கட்குக் கொள்கலமாயுள்ளது, புற்று அடங்கு
அரவின் செற்றச் சேக்கை - பாம்பு அடங்கியுள்ள புற்றைப்போலச் செற்றத்திற்குத்
தங்குமிடமாயது, அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலம்
முதலிய நான்கும் நீங்காததாகிய உள்ளத்தைத் தன்னிடத்துடையது, மக்கள் யாக்கை
இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப்
பாராய் - மேலோனே மக்கள் உடம்பு இத்தகையதென்பதனை அறிந்து இதனைப் புறமறியாகப்
பார்ப்பாயாக, என்று அவள் உரைத்த-என்று அவள் கூறி, இசைப்படு தீஞ்சொல்-புகழினையுண்டாக்குகின்ற
இனிய மொழிகள், சென்று அவன் உள்ளம் சேராமுன்னர் - உதயகுமரன் உள்ளத்திற்
சென்று அடைவதற்கு முன்னரே, பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவையின் - பளிங்கறையின்
புறத்தே விளங்குகின்ற பவளப்பாவையைப்போல, இளங்கொடிதோன்றுமால் இளங்கோ
முன் என் - இளமை பொருந்திய கொடியனைய மணிமேகலையின் உருவம் இளங்கோவின்
முன்னர் தோன்றிய தென்க.