பக்கம் எண் :

பக்கம் எண் :63

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
 
[மணிமேகலையின் உருவத்தை ஓவியமெனக் கருதி ஓவியனது கைத்திறத்தை வியந்த உதயகுமரன் பின்பு அதனை அவள் வடிவெனத் துணிந்து, பளிக்கறையுட் புகுதற்கு அதன் வாயில் காணப்படாமையால் பளிக்குச் சுவரினைக் கையாலே தடவிக் கொண்டு வருபவன் சுதமதியை நோக்கி, ''மணிமேகலை எத்திறத்தினள் ? கூறுதி'' என்றான். என்னலும், சுதமதி, ''அவள் தவவொழுக்கினள்; குற்றம் புரிந்தாரைச் சபிக்கும் ஆற்றலுமுடையவள் ; காம விகாரம் இல்லாதவள் ; நீ அவளை விரும்புதல் தக்கதன்று'' என்று கூறினள். கூறலும் அவன், ''சிறையுமுண்டோ செழும்புனல் மிக்குழி, நிறையுமுண்டோ காமம் காழ்க்கொளின்? அவள் எப்படியும் எனக்குரியவளாவள்'' என்று சொல்லிக் கொண்டு செல்பவன், சமண முனிவர்களின் இருப்பிடத்தில் ஓர் வித்தியாதரனால் இடப்பட்டவளென்று கூறப்படும் சுதமதி பௌத்த சங்கத்தைச் சார்ந்த மாதவி மகளுடன் வந்த வரலாற்றை அவளை வினாவித் தெரிந்துகொண்டு, ''மணிமேகலையைச் சித்திராபதியால் இனி அடைதல் கூடும்'' என்று சொல்லிப் போயினன். போனவுடன் மணிமேகலை வெளியே வந்து சுதமதியை நோக்கி, அன்பிலள் தவவுணர்ச்சியில்லாதவள், பொருள் விலையாட்டி,'' என்று என்னை இகழ்ந்தனன் என்னாது அவன் பின்னே என் நெஞ்சு செல்லலுற்றது ; ''இதுவோ காமத்தியற்கை ; இதன் தன்மை கெடுவதாக ;'' என்று சொல்லிக்கொண்டு நின்றாள். அப்பொழுது இந்திர விழாவைக் காணுதலுற்ற மணிமேகலா தெய்வம் அவர்கட்குத் தெரிந்த ஓர் மடந்தை வேடம் பூண்டு அப்பொழிலையடைந்து, பளிக்கரையிலுள்ள பாதபீடிகையை வலங்கொண்டு மேல் எழும்பி நின்று பலவாறு துதித்தது. அப்பொழுது பகற்பொழுது நீங்க அந்திமாலை வந்துற்றது. (இதன்கண் சுதமதி வராலாறு கூறும் வாயிலாகச் சமணரினும் புத்தர்கள் அருளுடையோ ரென்பது வலியுறுத்தப்படுகின்றது. புத்த தேவனைப் பரவுதல் நன்கமைந்துள்ளது. மேற்றிசையில் ஞாயிறு வீழக் கீழ்த்திசையில் நிறை மதி தோன்றுதலை உருவகப்படுத்தி யிருப்பதும், மாலைப்பொழுதின் நிகழ்ச்சிகள் கூறுவதும் கவியின் கற்பனைத் திறத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாம்.)]
 






5

இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி
விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப்
பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையின்
விரைமல ரைங்கணை மீன விலோதனத்து

உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப