அரும்பசி களைய வாற்றுவது காணான்
திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன்
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை
மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப்
பிழையா விளையுளும் பெருகிய தன்றோ
ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர்
மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக்
கயக்கறு நல்லறங் கண்டனை யென்றலும்
விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்
திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி
உயிரொடு வேவே னுணர்வொழி காலத்து
வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய
சாது சக்கரன் றனையா னூட்டிய
காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன்
ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய்
ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து
வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயிலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்
ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத
தகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்தவர்
முகங்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என
மறந்தே னதன்திறம் நீயெடுத் துரைத்தனை
|