பக்கம் எண் :

பக்கம் எண் :68

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை
 

உரை

1--6 இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி-அரசிளங்குமரன் கண்ணுற்ற அழகிய இளம் பூங்கொடியனைய மணிமேகலை, விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப-விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனியையுடைய வானவர்களும் வியக்குமாறு, பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்து - பளிங்கினாலாய பொருமுக வெழினியை வீழ்த்து, திருவின் செய்யோள் ஆடிய பாவையின் - திருமகளாடிய பாவையைப்போல, விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப - மணம் பொருந்திய மலராகிய ஐந்தம்புகளையும் மீனக்கொடியையும் உடைய அநங்கனுடன் தன் உருவத்தை வெளிப்படுத்த ;

பொற்பூங்கொடி - காமவல்லியுமாம் ; இது பொன்னுலகத்துள்ள தென்பர். எழினி - திரைச்சீலை ; பொருமுக வெழினி-மூவகைத் திரைச் சீலைகளுள் ஒன்று ; அரங்கின் வலத்தூண் இரண்டிலும் உருவு திரை யாய் அமைவது ; எழினி மூன்றனையும் 1"ஒருமுக வெழினியும் பொரு முக வெழினியும் ; கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்து"என் பதனாலறிக. திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள் ; திருமகள்- இன் : சாரியை. ஆடிய பாவையின் - ஆடுதற்குக் கொண்ட பாவை யுருவைப்போல ; கொல்லிப் பாவையுருக்கொண்டு ஆடினமையின் அக் கூத்தும் பாவை யெனப்படும் ; அது போர் செய்தற்குச் சமைந்த கோலத்துடன் அவுணர் மோகித்து விழும்படி திருமகளாடியது ; பதினோராடலுளொன்று ; 2;"செருவெங் கோல மவுணர் நீங்கத், திரு வின் செய்யோ ளாடிய பாவையும்'' என்பது காண்க. "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" என்பதன் கருத்து இவளுருவைக் கண்டவுடன் இளங்கோவனுக்குக் காமவுபாதை உண்டாயிற் றென்பதாம்.

7--12 ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் - (மணிமேகலையின் உருவத்தை ஓவியம் என நினைந்து) ஓவியக்காரன் அதனை எழுதுமாறு மனதில் அமைத்ததை வியக்கின்றவனாய் உதயகுமரன், காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து - அவ்வடிவம் நீலமலரனைய கண்களையுடைய மணிமேகலை யாதலைத் தெளிந்து, தாழ் ஒளி மண்டபம் தன் கையில் தடைஇச் சூழ்வோன் - தங்கிய ஒளியுடைய பளிக்கு மண்டபத்தைத் தன் கையாலே தடவிப் பார்த்துச் சுற்றி வருபவன், சுதமதி தன்முகம் நோக்கி - சுதமதியின் முகத்தைப் பார்த்து, சித்திர கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என - சித்திரக் கைத்தொழில் எப்பக்கமும் நிறைந்திருக்கின்றன நின் இளங்கொடி போல்பவள் எவ்விடத்தாள் கூறுக என ;


1 சிலப். 3 : 109-10. 2; சிலப். 6 : 60-1.