பக்கம் எண் :

பக்கம் எண் :69

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

தாழ்தல்-தங்குதல். வாயில் கரண்டற்கு மண்டபத்தைத் தடவிச் சூழ்ந்தனனென்க. சூழ்ந்து வருங்கால் மணிமேகலையின் உருவம் எத் திசையினும் வெளிப்பட்டமையின் "சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன" என்றான் ; மண்டபத்திலுள்ள ஓவியப்பாவை பலவற்றுடன் மணிமேகலையின் உருவம் வேறுபாடின்றி யிருந்தமையின் அங்ஙனம் கூறினானெனலுமாம் ; 1"மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃ தோவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்" 2"ஈங்கிம் மண்ணீட்டியாரென வுணர்கேன்" எனப் பின்வருவன காண்க. திறம்-இயல்புமாம். சுதமதி காவற் பெண்டாகலின் ''நின் இளங்கொடி'' என்றான். ஓவியன் என்பதற்கு உதயகுமரன் சித்திரம் போன்றவனாய் நின்றென்றுரைத்தல் ஈண்டைக்குப் பொருந்தாமையோர்க.

13--8.  குருகு பெயர்க் குன்றங் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி- கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை யொத்த நினது இளமை யழகினை, முகந்து தன் கண்ணால் பருகாள் 3 ஆயின் பைந்தொடி நங்கை-ஆராயுமிடத்துப் பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை தன் கண்களால் முகந்து பருகாள், ஊழ்தரு தவத்தள் - முறையாகப் பெற்ற தவத்தினையுடையள், சாபசரத்தி-சாபமாகிய அம்பையுடையவள், காமற் கடந்த வாய்மையள் என்றே - காமனை வென்ற மெய்ம்மையை யுடையவள் என்று, தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப-தூய மலரணிந்த கூந்தலையுடைய சுதமதி கூற ;

குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க ; 4"குருகுபெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே" "குருகுபெயர்க்குன் றங்கொன்றான்" என்பன காண்க. முருகு-இளமை ; ஈறு திரிந்தது ; ஊழ்தரு தவத்தள்- ஊழினாலே தரப்பட்ட தவத்தினள் என்றுமாம் ; என்னை? 5; தவமுந் தவமுடையார்க் காகும்" என்பவாகலின். சாபசரத்தி - வில்லையும் அம்பையும் உடையாள் என்பதோர் பொருளும் தோன்ற நின்றது ; சாபம் - வில். ஆயின், நங்கை பருகாள் ; தவத்தள் ; சரத்தி ; வாய்ம்மையள் ; என்று உரைப்பவென்க.

19-27. சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ- வளவிய நீர் மிகுந்த விடத்து அதனைத் தாங்கும் அரணும் உண்டோ, நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்-அவ்வாறே காமம் அடிப்படின் அதனை நிறுத்தும் தன்மையும் உளதாகுமோ, செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென - செவ்வியையுடையளாயின் என்னை ? அவள் செவ்வியளாகட்டும் என்று, அவ்விய நெஞ்சமொடு அகல் வோன்-பொறாமை கொண்ட உள்ளத்தோடும் நீங்குவோன்,


1 மணி. 18 : 69-7. 2; மணி. 18 : 156. 3; பா. வே. ஆயினிப் பைந்தொடீ என்பதும் பாடம். 4; சிலப். 34 : ''சரவண'' : ஆய்வளை. 5; குறள். 262.