பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 31
31

சிறப்பாகத் தமிழியலை அறியார். செய்யுள் வழக்கினும் உலக வழக்கே முந்தியதென்பதை அறிதல் வேண்டும்.

எ-டு:

இறந்தகாலம்

  தனிப்பு - வந்தான்
  தொடர்ச்சி - வந்துகொண்டிருந்தான்
  நிறைவு - வந்திருந்தான்
  நிறைவுத் தொடர்ச்சி - வந்துகொண்டிருந்திருந்தான்.

நிகழ்காலம்

  தனிப்பு - வருகின்றான்
  தொடர்ச்சி - வந்துகொண்டிருக்கின்றான்
  நிறைவு - வந்திருக்கின்றான்
  நிறைவுத் தொடர்ச்சி - வந்துகொண்டிருந்திருக்கின்றான்

எதிர்காலம்

  தனிப்பு - வருவான்
  தொடர்ச்சி - வந்துகொண்டிருப்பான்
  நிறைவு - வந்திருப்பான்
  நிறைவுத் தொடர்ச்சி - வந்துகொண்டிருந்திருப்பான்

இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி இன்று வழக்கு வீழ்ந்தது. எதிர்கால நிறைவும், நிறைவுத் தொடர்ச்சியும் ஐய இறந்த காலத்தையும் உணர்த்தும்.

ஆங்கில நிகழ்கால வினையெச்சத்திற்கு (Present Participle) ஒத்த செய்துகொண்டு என்னும் தமிழ்த் தொடர்ச்சி வினையெச்ச வாய்பாடு, தொன்று தொட்ட வழக்கேயன்றி இடைக்காலத்ததோ, ஆங்கிலத்தைப் பின்பற்றியதோ அன்று. கொள் என்னும் தற்பொருட்டுத் (Reflexive) துணைவினை (Auxiliary) எங்ஙனம் தமிழ் மரபினதோ அங்ஙனமே கொண்டு என்னும் தொடர்ச்சிகாலத் துணைவினையெச்சமும் தமிழ் மரபினதாம். தமிழிலக்கண நூலார் நிகழ்கால வினையெச்சமாகக் குறிக்கும் செய்ய என்னும் வாய்பாடு, தன் எழுவாய் வினையொடு முடியும்போது, ஆங்கிலப் பொருட்டு வினையெச்சத்தை (Infinitive Mood) யொத்து எதிர்காலத்தை யுணர்த்துவதால், உண்மையில் எதிர்கால வினையெச்சமேயாம். செயின் (செய்தால்) என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தை ஐய வினையெச்சம் (Subjunctive mood) என்று குறிப்பதே தக்கதாம்.

தனிப்பு என்னும் காலவகை வழக்குஞ் செய்யுளும் என்னும் இருவகை வழக்கிற்கும் பொதுவாம். நிறைவும் செய்யுட்கு ஏற்கும். எ-டு : "ஏது நிகழ்ச்சி யெதிர்ந்துள்ள தாதலின் (மணி - 3 : 4) எதிர்ந்துளது எதிர்ந்திருக்கின்றது. (நிகழ் கால நிறைவு) தொடர்ச்சி வினையெச்சம் பொருள் செய்யுளில் முற்றெச்சத்தால் உணர்த்தப் பெறும்.