பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 33
33

லென்பது; துளு மாமரத்தை கொக் கென்பது. ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க என்றே நச்சினார்க்கினியர் திசைச்சொற்கு எடுத்துக்காட்டியிருத்தலையும், ஏனையுரையாசிரியரும் அவரைப்போன்றேயன்றி வேணம் (வேண்டும்), லேது (இலது) பாளெ (வாழை) முதலிய கொச்சைத் திரிபுகளை எடுத்துக் காட்டாமையும் நோக்கித் தெளிக.

மேனாட்டார் இற்றை அறிவியல் துறைகளைக் கண்டு நுட்பமாக வளர்த்து மேன்மேலும் முன்னேறிவருபவரேயன்றி, தொன்றுதொட்டு வரும் மொழித் துறையில் பண்டைத் தமிழர்போல் தேர்ச்சி பெற்றவரல்லர். ஓரொலிக்குப் பலவரி வடிவும் ஒரு வரிவடிவிற்குப் பலவொலியும் கொண்டதும், உயிர்மெய்க்குத் தனி வரிவடிவில்லதும், தனியொலியை இணைவரியாலும் இரண்டிற்கு மேற்பட்ட தொகுதி வரியாலும் குறிப்பதும், ஒலிக்காத ஊமை வரிகளுடையதும், எத்தனை உயர்கல்வி கற்பினும் ஆசிரியன்துணை அல்லது அகரமுதலித் துணையின்றி ஒரு சொல்லைப் பலுக்கும் (உச்சரிக்கும்) முறை அறிய வியலாததும் அவர் மொழியாகும். இற்றை அறிவியல்களை எல்லாம் கண்டதனாலும், மேன்மேலும் வியக்கவும் மருளவும்தக்க புதுப்புனைவுகளைத் தொடர்ந்து இயற்றிக்கொண்டே வருவதனாலும், எல்லாத் துறைகளிலும் வெள்ளையர் சொல்வதே விழுமிய உண்மையென இந்தியருட் பெரும்பாலோர் சிறப்பாகத் தமிழர் கருதுகின்றனர். தமிழ்மொழி அமைப்பையும் அதன் மரபையும் மேலையரின் மொழியமைப்பு மரபுகளோடு ஒப்புநோக்கின், மொழித் துறையிற் கீழையரே இன்றும் மேலையர் என்பது விளங்கித் தோன்றும்.

பேதைமை என்பது கற்றோர் கல்லார் ஆகிய இரு சாரார்க்கும் பொதுத் தன்மையாகும். ஆதலால் பட்டக்கல்வி, கற்றமட்டில் ஒருவர் தம் பிறவிக் குணமான பேதைமை நீங்கப் பெறார். ஆகவே, கல்லாப் பேதையர் போன்றே கற்ற பேதையரும் உளர் என அறிக.

சென்ற நூற்றாண்டுவரை, மொழிநூற்கல்வி கால்டுவெல் போன்ற நுண்மதியும் நடுநிலையும் சிறந்த பேரறிஞரால் நன்முறையில் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த நூற்றாண்டில் ஆரியத்தையே அடிப்படையாகக் கொண்டு தலைகீழாக ஆய்ந்த மேலையர், மொழி மூலத்தைக் காணாது முட்டுப்பட்டு, வரலாற்று முறையை அடியோடு வண்ணனை முறையையே வளர்த்து வருகின்றனர். அதனால் தம்மையும் தம் மொழிகளையும் போன்றே பிறரையும் பிறர் மொழிகளையும் கருதி, இலக்கண அறிவும், மொழிப்பண்பாடும் புலமையும் இல்லாத பொதுமக்கள்தம் வாய் கோணியவாறெல்லாம் ஒலித்து பேசுங் கொச்சை வழக்கையே அளவை மொழியாகக் கொண்டு அதனையே உலக வழக்கெனப் போற்றிவருகின்றனர். இது தமிழிற்கு எள்ளளவும் ஏற்காதென்றும் உலகவழக்கு வேறு கொச்சை வழக்கு வேறென்றும் மொழித்துறையில் மேனாட்டார் இன்னும் தமிழரிடமிருந்தே அறிவுபெறற்குரியர் என்றும், தெற்றெனத் தெரிந்து கொள்க.

 
- முதன்மொழி (15. 2. 1971)