எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா?
மக்கள் அறிவடையும் வழிகள், கல்வி, கேள்வி, ஆராய்ச்சி,
துய்ப்பு என நால் வகைப்படும். ஒருவர பிறர எழுதி வைத்ததைத் தாமாய்க் கற்றறிவது கல்வி;
அங்ஙனமன்றி அறிஞரையடுத்துத் தமக்கு வேண்டியவற்றைக் கேட்டறிவது கேள்வி; இவ்விரண்டுமன்றி,
ஒன்றைப் புதுவதாகத் துருவி யாய்ந்தறிவது ஆராய்ச்சி; இனி வாழ்நாளில் பற்பல வகையில் தாமே
துய்த்து அறிவது துய்ப்பு, (அனுபவம்). இவற்றில் கல்வி என்பது இக்காலத்தில் கேள்வியையுந்
தழுவும்.
ஆராய்ச்சி ஆராயப் பெறும் பொருள்
நோக்கிப் பலதிறப்படும். அவற்றுள் சொல்லாராய்ச்சியும் ஒன்று. அது மொழியாராய்ச்சியுட்பட்டது.
ஒரு மொழிக்குட்பட்ட சொல்லின் அல்லது சொற்களின் வரலாற்றை ஆய்வது சொல்லாராய்ச்சி;
ஒரு மொழிக்குப் பிற மொழியோடு அல்லது மொழிகளோடு உள்ள தொடரபை ஆய்வது மொழியாராய்ச்சி.
மொழிகளெல்லாம் பெரும்பாலும் சிலவும் பலவுமாய்த் தம்முட் தொடர்பு கொண்டிருப்பதால், மொழியாராய்ச்சியில்லாதார
செய்யும் சொல்லாராய்ச்சி கட்டுப்படுவதே.
சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும்
ஒருவர முதற்கண், ஏதேனு மொரு மேலை மொழியில், சிறப்பாக ஆங்கிலத்தில், உள்ள மொழிநூல்களையும்
சொல்லாராய்ச்சி நூல்களையும் சொல்லியலகராதிகளையும் கற்றல் வேண்டும். அங்ஙனம் கற்கும்போதே,
மொழியொலியியல் (Phonology)
, சொல் வடிவியல் (Morphology),
பொருட்பாட்டியல் (Semasiology)
முதலிய மொழி நூற்றுறைகளைச்
செவ்வன் உணரந்து கொள்ளுதல் வேண்டும். அதன்பின் சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும் மொழியின்
இலக்கணத்தைக் கற்பதுடன், அதிலுள்ள சொற் குடும்பங்களையெல்லாம் தனித்தனியாகவும் தொகுதி
தொகுதியாகவும் நோக்கி, அவற்றின் தொடர்புகளை அறிந்துகொள்ளுதல் வேண்டும். பின்னர அம்
மொழிச் சொற்களை அம் மொழிக் குடும்பத்தைச் சேரந்த பிற மொழிச் சொற்களோடும் அக்
குடும்பத்தையடுத்த அயற் குடும்ப மொழிச் சொற்களோடும் ஒப்புநோக்கிக் காண்டல் வேண்டும்.
சொல்லாராய்ச்சிக்குச் சொல் வரிசைகளை ஒப்புநோக்குவதினும், இலக்கண நெறி முறைகளை ஒப்புநோக்குவதே
மிகுதியும் வேண்டப் பெறுவதாகும்.
மொழிநூல் அல்லது சொல்லியல்நூல்,
கணிதம்போலத் தற்சாரபுக் கலையன்று. அதற்குப் பிறகலையறிவும் இன்றியமையாது வேண்டப் பெறும்.
|