உளநூல் (Psychology)
, வரலாற்று நூல் (History)
,
ஞாலநூல் (Geography)
, மாந்தனூல் (Anthropology)
,
என்பன மொழி நூற்குப் பெரிதுந் துணை செய்யும். வணிகம்பற்றி ஒரு மொழியினின்று
இன்னொரு மொழிக்குச் சென்று வழங்குஞ் சொற்கட்கெல்லாம் வரலாற்றறிவும் ஞால நூலறிவும் இன்றியமையாதன.
எ-டு : துகி (தோகை), teak
(தேக்கு).
மேற்கூறியவாறு கருவி நூல்களுங் கலைகளும்
கைவரப்பெற்றபின், எல்லா மொழிகட்கும் பொதுவான சொல்லியல் நெறிமுறைகளையும், ஆராய்வான்
எடுத்துக்கொண்ட ஒரு மொழிக்கேயுரிய சொல்லாக்க நெறி முறைகளையும் அறிந்து
கொள்ளல் வேண்டும்.. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன வாயினும்" பல சொற்கு, "மொழிப்
பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" ஆதலின் அவை இடுகுறியெனக் கொள்ளுதல் கூடாது. சற்று
ஆழ்ந்து நோக்கின் அவற்றின் வேர்ப்பொருள் மெல்ல மெல்ல மிளிர்ந்து
தோன்றும். சில சொற்கள் காலக்கடப்பில் மிகமிகத் திரிந்தும் இனச் சொற்களை
இழந்தும் வேர்ச்சொல் வழக்கற்றும் போனதினால், அவற்றின் வேர்ப்பொருள்
எத்துணை ஆழ்ந்து நோக்கினும் தோன்றுவதில்லை. அவற்றுள் ஒரு சிலவற்றிற்கு, அயன் மொழியிலுள்ள
இனச்சொற்கள் வேர் காட்டினுங் காட்டும்.
சுடலை, கொடுக்கு
முதலிய பல சொற்களின் வேர்ப் பொருள் நோக்கிய மட்டில் தோன்றும், மரம்
பொன் முதலிய சொற்களின் வேர்ப்பொருள் ஆழ்ந்து நோக்கினாலன்றித் தோன்றா.
தமிழ், கருவி முதலிய சில சொற்களின் வேர்ப் பொருள் ஆழ்ந்து நோக்கினும்
தோன்றுவதில்லை. பொருந்தப் புகலலாக ஒரு சொற்கு பொருட் காரணங்காட்டுவது பொருந்தாது. ஒரு
சொற்குக் காட்டும் வேர் எல்லாத் தடைகட்கும் விடையமையுமாறு, உலகத்தோடும்,
கலைகளோடும், மலையாதிருத்தல் வேண்டும். அம்பு (வளையல்) என்னும் சொல்லின் வேர்ப்
பொருள், amphi(around)
என்னும் கிரேக்கச் சொல்லால்
அறியப் படுகின்றது. தமிழுக்கும் கிரேக்க மொழிக்கும் உள்ள தொடர்பு என் ''Origin
of Culture''
என்னும் ஆங்கில நூலில் விளக்கப்பெற்றுள்ளது. ஆண்டுக் காண்க.
ஒரு சொல்லின்
பொருட் காரணங் காணுதற்கு, முதற்கண், அச் சொல்லின் திருந்திய வடிவைக் கண்டுகொள்ளல் வேண்டும்.
மணத்தக்காளி என்பதன் திருந்திய வடிவு மணித்தக்காளி என்பது. தக்காளி இனத்திற் சிறியது
என்பது அதன் பொருள். மணி என்பது ஒரு குறுமைப் பொருள் முன்னொட்டு. மணத்தக்காளி என்னும்
தவற்று வடிவிற்கு, மணமுள்ள தக்காளி என்றுதான் பொருள்கூற முடியும். இங்ஙனமே சென்னைப் பல்கலைக்கழக
அகராதியிற் கூறப்பட்டுள்ளது.
ஒரு சொல்லின் திருந்திய வடிவைக்
கண்டபின், அச் சொல்லாற் குறிக்கப்படும் பொருளின் சிறப்பியல்பை நோக்க வேண்டும். ஒரு
பொருளின் சிறப்பியல்பு, அப் பொருள் முழுமையுந் தழுவியதாகவோ அதன் ஒரு
|