பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 54
54

விரண்டிலொன்று திரு என்னுஞ் சொல் தோன்றுவதற்குக் காரணமாயிருந்திருக்கலாம்.

திரை என்னுஞ் சொல்லே செல்வத்தைக் குறியாமல், அதன் திரிபான திரு என்னுஞ் சொல் குறிப்பதேன் எனின், சொல்லின் பொருள் மாறும்போது சொல்லும் மாறவேண்டும் என்னும் சொல்லாக்கப் பொதுவிதிபற்றி யென்க. அல்லாக்கால் பல பொருள்கள் உடன்மயங்கிக் கருத்துணர்வு தடைப்படு மென்க.

திரை என்பதிலிருந்து திரு என்பது தோன்றியிருத்தல் திருப்பாற் கடலிலிருந்து திருமகள் தோன்றினாள் என்னுங் கதையை நிலையுறுத்தும். திரை = கடல். திரு = திருமகள்.
  திரைகட லோடியுந் திரவியந் தேடு
நீர்போயும் - ஒன்றிரண்டாம் வாணிகம் இல்

என்பவற்றாலும், பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய வற்றாலும், பண்டைக்காலத்திலும் நீர் வாணிகத்தாலேயே பெரும் பொருளீட்டப்பட்டமை அறியப்படும். கடல் போய்வந்த செல்வத்தைக் கடல் தந்ததென்று கூறுதல் பொருத்தமானதே. மேலும் செல்வத்தின் சிறந்த வகையான முத்தே பெரும்பாலும் கடலிலிருந் தெடுக்கப்படுவது. இதனாலும் செல்வம் கடலில் பிறந்ததாகக் கூறலாம். செல்வத்தின் உருவகமே அல்லது ஆட்படையே (personification) திருமக ளாதலின், அவள் திருமாலின் இருப்பிடமாகக் கூறப்படும் திருப்பாற்கடலினின்று தோன்றினதாகக் கூறப்பட்டாள் என்க. (வடமொழியிலுள்ள திரவியம் என்னும் சொல் திரவம் என்பதினின்றே தோன்றியது போலும்!)

ஆகவே, திரு என்னுஞ் சொல், தனிமொழியாகவும் அடைமொழியாகவும் முதலாவது செல்வப் பொருளிலும் பின்பு அதன்வழிப்பட்ட பல பொருள்களிலும் தொன்றுதொட்டு வழங்கிவரும் தனித் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும். இலத்தீன், கிரேக்கு, செருமானியம் முதலிய மேலையாரிய மொழிகளில் இச் சொல்லில்லாமையால், இது வடசொல் லன்று என்பதும் வெளியாம். ஆரியர் நாவலந்தேயத்திற்கு (இந்தியா விற்கு) வந்தபின், வடமொழியிற் கலந்துபோன நூற்றுக்கணக்கான திரவிட அல்லது தென் சொற்களில் திரு என்பதும் ஒன்றாகும்.

திரு என்னும் தென்சொல்லே வடமொழியில் ஸ்ரீ என்றாகி, பின்பு சீ எனத் தமிழிற் சிதைந்து வழங்குகின்றதென்க. இப்போது தமிழ்நாட்டில் கள்ளிக்கோட்டையென கரைத் துறைநகராகிய கோழிக்கோட்டிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதியான துணி ஆங்கிலத்தில் கலிக்கோ (Calico)என்றும் பின்பு அதன்வழியாய்த் தமிழில் கலிக்கா என்றும், வங்காளத்தில் காளிக்கோட்டம் என்னும் நகர்ப்பெயர் ஆங்கிலத்தில் கல்குற்றா என்றும் பின்பு அதன்வழியாய்த் தமிழில் கல்கத்தா என்றும் வழங்குவதை நோக்குக. கோழிக்கோடு, காளிக்கோட்டம் என்னுமிரண்டும் தனித்தமிழ்ச் சொற்களாகும். கள் -