பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 56
10

''உத்தரம்'', ''தக்கணம்'' எம்மொழிச் சொற்கள்?

தமிழின் சொல்வளத்தை அறியாதார், வடமொழி கடன்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான தென்சொற்களையும் வடசொற்களென்றே மயங்கி வருகின்றனர். அத்தகைய சொற்களுள், உத்தரம், தக்கணம் என்பன இரண்டாம்.

திரவிடனின் முன்னோனான தமிழன் பிறந்தகமாகிய குமரிநாட்டில், முதற்கண் தோன்றிய நாற்றிசைப் பெயர்கள், தென், வடம், கீழ், என்பன. அவை 4ஆம் வேற்றுமைக்குரிய குவ்வுருபேற்றுத் தெற்கு, வடக்கு, கிழக்கு (கீழ்க்கு), மேற்கு என்றாகி, பின்னர் ஆட்சிபற்றி முதல் வேற்றுமையாகவே வழக்கூன்றிவிட்டன.

அவற்றுள், முன்னிரண்டும் நிலைத்திணைச் சிறப்பும், பின்னிரண்டும் நில மட்டமும் பற்றியன.

தென் என்பது தென்னை. தென்னுதல் = கோணுதல், பெரும்பாலுந் தென்னிக் கொண்டிருப்பதால் தென்னை அப் பெயர் பெற்றது. தென் -தென்னை, தென் - தென்கு - தெற்கு.

தென்னை இயற்கையாகத் தோன்றியது குமரிக்கண்டத்தில். இக்காலத்தில் தென்னையின் பல வகைகள் இந்தோ மலையாவின் இயற்கையாக வளர்வதால் அந் நிலப்பகுதியே தென்னையின் பிறந்தகமாயிருக்கலாமென்று கருதப்படுகின்றது. ஆயின் அப் பகுதியும் குமரிக் கண்டத்தைச் சேர்ந்ததே யென்பதை அறிதல்வேண்டும். பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடைப்பட்ட எழுநூற்றுக் காவத நிலப்பரப்பிலிருந்த பல்வேறு நாடுகளைக் குறிக்குமிடத்து, அடியார்க்கு நல்லார் ஏழ்தெங்க நாட்டையே முற்படக் குறித்திருத்தலால், அந் நாடுகள் குமரிக்கண்டத்தின் தென்கோடியடுத்திருந்தமை பெறப்படும். தென்கோடியில் தென்னை சிறப்பாக வளர்ந்ததனாலேயே, தென்றிசை அப்பெயர் பெற்றிருத்தல் வேண்டும்.

இங்ஙனமே நாவலந் தேயத்தின் வடகோடியிலும் வடமரம் (ஆலமரம்) சிறந்து வளர்ந்ததனால். வடதிசை அப் பெயர் பெற்றது. வடநாவலப் பகுதியான வங்கத்தில் அது சிறப்பாக வளர்வதனாலேயே, மேலைப் பயிர்நூலாரும் அதற்கு "வங்காள அத்தி" (Ficushem-galensis) என இலத்தீனப் பெயரிட்டிருக்கின்றனர்.