ஆலமரம் சூழ விழுதுவிட்டு வட்டமாக அகன்று
வளர்வதால், வடம் எனப் பெயர்பெற்றது. வல் - வள் - வட்டு - வட்டம் - வடம்.
ஒ.நோ: பட்டம் - படம் = துணி. மானியர் வில்லியம்சு
சமற்கிருத - ஆங்கில அகரமுதலியும், வட (vata) என்னும் ஆலமரப் பெயருக்கு வட்டம் என்பதையே
பொருட் கரணியமாகக் கூறுகின்றது.
வட்டம் - வ வட (வட்ட)
வடமொழியென்னும் சமற்கிருதத்தில், வட்டம் என்பது வ்ருத்த
என்றேயிருக்குமென்பது கவனிக்கத்தக்கது.
வட்டம் (தமிழ்) - வட்ட (பிராகிருதம்) - வ்ருத்த (சமற்கிருதம்)
நில மட்டம் இற்றைத் தமிழ் நாட்டிற் போன்றே குமரிக்
கண்டத்திலும், மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்ததனால், அவ்விருதிசைகளும்
முறையே கீழ் எனப்பெயர் பெற்றன.
உலகில் உயர்ந்த பனிமலை, ஒரு காலத்தில் கடற்கரையாய்
இருந்தது. அன்று வடதிசை கடலால் தாழ்ந்தும், தென்திசை குமரிமலையால் உயர்ந்தும், இருந்தன.
பின்னர் பனிமலை யெழுந்தபின் இருதிசையும் சமமாயின. அதன் பின் குமரிமலை மூழ்கிவிடவே, வடதிசையுயர்ந்தும்
தென்றிசை தாழ்ந்தும் போயின. ஆதலால், வடதிசைக்கு உத்தரம் என்னும் பெயரும் தென்றிசைக்குத்
தக்கணம் என்னும் பெயரும் தோன்றின. அவற்றொடு ஏனையிரு திசைக்கும், கீழ் என்னும்
பழைய கரணியம் பற்றியே குணம் குடம் என்னும் இரு பெயர்களும் உடன்தோன்றின.
குள் - குழி. குள் - குண்டு = குழி, பள்ளம். குள் - குண்
- குணம் = பள்ளம். குண்டுங் குழியுமாயிருக்கிறது என்னும் வழக்கை நோக்குக.
குடு - குடுமி = உச்சி, மாடவுச்சி, தலையுச்சி, உச்சிக்கொண்டை,
உச்சிமுடி, மகுடம், மலையுச்சி, கொடுமுடி. குடு - குடம் = உயர்ச்சி, மேடு, குடநாடு = உயர்ந்த
மலைநாடான சேரநாடு, நாடு.
கிழக்கு மேற்கு என்னுஞ் சொற்களையொத்து, குணம் குடம்
என்பனவும் குணக்கு குடக்கு எனக் குவ்வுருபேற்றன.
தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலக முதன்மொழி யாதலால்,
சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடத்தையுஞ் சுட்டும் ஆ (அ) ஈ (இ) ஊ (உ) என்னும் முச்சுட்டும்
முதன்முதல் மாந்தன் வாயில் தோன்றிய சுட்டொலிகளாக மட்டுமன்றி உயிரொலிகளாகவும் இருக்கின்றன.
இதனாலேயே, அவை தமிழ் நெடுங்கணக்கில் முதலில் வைக்கப்பட்டிருப்பதுடன், இன்றும் ஆரியமொழிகளிற்போல்
மறையாதும் திரியாதும் இயல்பாகவே தமிழில் வழங்கி வருகின்றன. சுட்டுவகையிலும் அதன் வழிப்பட்ட
மூவிடப்பெயர் வகையிலும், தமிழ் (திரவிடம்) ஆரியத்திற்கு (சமற்கிருதத்திற்கு) முந்திய
தென்றும், உலக முதன் மொழியொடு நெருங்கிய தொடர்புடைய தென்றும், கால்டுவெலார்
|